சனி, 5 ஜனவரி, 2013

தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப் புலமைபெற - 2

2. ஆங்கிலத்திறன் புத்திகூர்மையின் வெளிப்பாடா?

முந்தைய அத்தியாயம்:


நம் சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று ஆங்கிலம் நன்றாக பேசத்தெரிந்தவன் புத்திசாலி! இது சினிமா, பத்திரிக்கை போன்ற ஊடகங்களாலும் மக்கள் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து, ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு சேவகம் புரிந்த அரசு அதிகாரிகளும் ஆங்கிலப் புலமை பெற்றிருந்ததால் அவர்களுக்கு பணிந்து நடந்த பொதுமக்களுக்கு,ஆங்கிலம் அச்சத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இவ்வாறான தொன்றுதொட்டுவரும் நம்பிக்கையால் ‘நன்றாகப் படித்தவன்’ என்றாலே நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்தவன்தான் என்றொரு எழுதாவிதி வந்துவிட்டிருக்கிறது. அதுவே எவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பாடங்களை பொருளுணர்ந்து படித்திருந்தும் தமிழ் வழி மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பதாகவும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. சரி வரலாற்றை விட்டுவிடலாம், உங்களுக்கு சில எளிய கேள்விகள்:

அ) ஆங்கிலமல்லாத பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, சீன மொழி போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றவர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன? அந்த மொழிகள் உங்களுக்கு தெரியாததால் எப்போதேனும் தாழ்வாக உணர்ந்திருக்கிறீர்களா?
ஆ) வடக்கத்தி சேட்டுக்கள் மார்வாடிகளிடம் வேலை செய்யும் ஐந்தாம் வகுப்பைத் தாண்டிடாத வேலையாட்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஹிந்தி, உருது, மார்வாரி போன்ற மொழிகளில் பேசும் திறன் பெற்றிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
இ) சுற்றுலாத் தலங்களில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் பேசுவதை கவனித்திருப்பீர்கள். சென்னை, பாண்டிச்சேரி, மதுரை போன்ற நகரங்களில் அவர்களில் சிலர் வேறுசில ஐரோப்பிய மொழிகளைப் பேசுவதையும் பார்த்திருக்கலாம். அவர்களைப்போல நம்மால் பேச முடியவில்லையே என ஏங்கியிருக்கிறீர்களா?
ஈ) ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளில் எந்த மொழியில் கல்வி கற்கிறார்கள்? அவர்கள் நிகழ்த்தியுள்ள கண்டுபிடிப்புகள் சாதனைகள் எத்தகையவை? அவர்களால் உலகளாவிய வாணிபம் செய்ய முடிகிறதா? இல்லையா?
உ) தொலைக்காட்சியில் ஒரே ஒரு அலைவரிசை மட்டுமே இருந்த காலத்தில் தூர்தர்ஷனில் சினிமாவும் நாடகங்களும் பார்த்தே ஹிந்தியை சரளமாக பேசக்கற்றவர்களை உங்களுக்குத் தெரியாதா?

 முதல் கேள்விக்கு நம்மில் பலரது பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். ஏனெனில் பிரெஞ்சு, சீன மொழி போன்றவற்றை தெரிந்துவைத்திருப்பது பெரிய விசயம் என யாரும் நமக்கு சொல்லித்தரவில்லை. ஜெர்மானிய மொழியில் சரளமாக பேசுபவன் பெரிய அறிவாளி என யாரும் சொன்னதில்லை. ஏனெனில் அவையாவும் நம்முடைய அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவை அல்ல. அவற்றில் எதுவும் நம்முடைய வேலை வாய்ப்பை முடிவு செய்வதோ நமது பொருளீட்டும் திறனை பாதிப்பதோ இல்லை. அதனால் நாமும் கண்டுகொள்வதில்லை. உண்மையில் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்அரபி மற்றும் சீனம் ஆகிய மொழிகள்தாம் உலக அளவில் செம்மொழிகள், ஆழ்ந்த இலக்கியங்களையும் மனித வாழ்கைக்கு தேவையான சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொடையாக வழங்கியவை. (விக்கி மூலம்:http://en.wikipedia.org/wiki/Classical_language).  நம்முடைய தமிழ் மொழியும் அத்தகைய செம்மொழிகளுள் ஒன்றே என இன்று விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எனவே ஆங்கிலம் ஏதோ உயர்ந்த, மேன்மையான, கடினமான மொழி என்ற எண்ணம் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

 நான் பிறந்து வளர்ந்த ஈரோடு நகரில் ‘பீஸ் மடித்தல்’ என்றொரு வேலை உண்டு. வேட்டி, லுங்கி போன்றவை சில நூறு மீட்டர்கள் நீளத்துக்கு ஒரே துணியாக நெய்யப்பட்டு வெளிவரும். அவற்றை தேவையான அளவு கஞ்சி அல்லது வண்ணத்தில் ஊறவைத்து காய வைப்பார்கள். அப்படி காய்ந்த துணிகளை தேவையான நீளத்திற்கு வெட்டி மடித்து வைப்பதே அந்த வேலை. வாரக்கூலிகளாக இவ்வாறு சேட்டுகளிடம் பணிபுரிபவர்கள் ஹிந்தி கூட அல்ல... அதிலும் வேறுபட்ட மார்வாரி மொழி பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். ஒரு மொழியை பழக்கத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளில் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்கின்றனர். பள்ளிக் கல்வி மட்டுமின்றி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பைக்கூட தங்கள் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அதனாலேயே அவர்கள் ஆழ்ந்து கற்று அறிவுத்திறன் பெற்றவர்களாகவும் புதிய பொறிகளை கண்டுபிடிக்கும் சாதனையாளர்களாகவும் விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஜெர்மானியர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அங்கிருந்து தோன்றிய அறிவியல் அறிஞர்கள் பற்றியும் நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை. அதே போல இரண்டாம் உலகப்போருக்கு பின் வீழ்ந்து அதிலிருந்து எழுச்சி கொண்டு இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பான். தரத்திற்கு பெயர் போன பொருட்கள் அங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டோ நிறுவனம் ஜப்பானில்தான் இருக்கிறது. அவர்கள் அனைவரும் தாய்மொழியில்தான் கல்வி கற்கின்றனர். ஆங்கிலத்தை வெறும் தகவல் தொடர்பு மொழியாகவே கையாள்கின்றனர். சரி, விடுங்கள்... நம் நாட்டிலேயே ஒரு பொதுமொழி இல்லாததால் நாம் உயர்கல்வியை ஆங்கிலத்திலேயே கற்போம். ஆனால், இதுவரை நீங்கள் தமிழில் பயின்றதால் பாதகம் ஏதும் இல்லை சாதகம்தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இங்கே நான் நிறுவ விரும்புவது மூன்று விசயங்கள். ஆங்கிலம் பேசுபர்களெல்லாம் புத்திசாலிகள் என்றோ பேசத்தெரியாதவர்கள் முட்டாள்கள் என்றோ அர்த்தம் அல்ல. உலகிலுள்ள எத்தனையோ மொழிகளைப்போல ஆங்கிலமும் ஒரு மொழி, அவ்வளவே. தொடர் பழக்கத்தினால் சூழ்நிலையால் எந்த ஒரு மொழியையும் இயல்பாக எளிதாகக் கற்கலாம்!
எங்கே அதை என்னோடு செர்ந்து நீங்களும் சொல்லுங்கள்...

“ஆங்கிலப்புலமை புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல.ஆங்கிலகிபுலமை புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல. 
ஆங்கிலம் மற்றுமொரு மொழியே!

தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற-1



தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற-1

தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும் தங்கள் ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொள்ளவும், ஒரு புத்தகமாக கொண்டுவரும் நோக்கில் நான் எழுதிய கட்டுரைகளை இங்கே பதிப்பிக்கிறேன். இதை பலருக்கும் கொண்டு சேர்த்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் பயணடையச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்....



தமிழ் மீடியம் மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேசஎழுத முடியுமா?
  

நிச்சயமாக முடியும்! ஏற்கனவே லட்சக்கணக்கானோர் செய்துள்ளதை உங்களால் ஏன் செய்ய முடியாது? உற்சாகத்தோடு தொடர்ந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இன்றிலிருந்து சரியாக ஆறுமாதம் கழித்து உங்கள் ஆங்கிலத்திறனை நீங்களே எடை போட்டுப் பார்த்தால் அசந்து போவீர்கள். இதை எழுதும் நான் ஓர் ஆங்கிலப் பேராசிரியனோ அல்லது ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்துபவனோ அல்ல! உங்களைப் போன்றே பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் முடித்து, கல்லூரியில் கால் வைத்ததும் ஆங்கிலத்தில் பேச முடியாததாலும் பாடங்களை கிரகிக்க முடியாததாலும் சிரமப்பட்டு பின்னர் முட்டி மோதி மேலே வந்தவன்.


ஏதோ சமாளிக்கும் அளவு மட்டுமல்ல; எந்த அளவுக்கு உழைக்கத் தயாராக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு; உதாரணமாக ஆங்கிலத்தில் சிறுகதை எழுதும் அளவுக்கு கூட நீங்கள் திறமை பெற முடியும். அதனால்தான் ‘ஆங்கிலம் பேச/பழக’ எனத் தலைப்பிடாமல், ‘புலமை பெறஎனத் தலைப்பிட்டேன்.  நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவுக்கு புலமை பெற, இருக்க வேண்டியதெல்லாம் இரண்டு விசயங்கள்தான். 1) ஆர்வம் 2)விடா முயற்சி. ஆம், எதை சாதிக்கவேண்டுமானாலும் இவ்விரண்டு தகுதிலும் வேண்டும் என்பது பொது விதிதான். எனினும் இவ்விரண்டும் ஆங்கிலத்தில் புலமை பெற எப்படி உதவும் என்பதை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.  முதலில் ஆங்கிலம் பேசுவதில் தமிழ் வழி மாணவர்களுக்கேயான மனத்தடையை நீக்கும் வண்ணம் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இருக்கும். பின்னர் படிப்படியாக நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய அத்தியாயங்கள் இருக்கும். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு செய்யும் உபதேசம் போல் இல்லாமல், தான் நேற்று சென்ற பாதையை இன்று உங்களுக்கு காட்டிக்கொடுக்கும் ஒரு நண்பனைப் போன்றதொரு தோழமையான தொனியில் சொல்ல முயற்சி செய்துள்ளேன்.

மேலும், பின்வரும் அத்தியாயங்களில் இரு உள்ளார்ந்த நோக்கங்கள் இருக்கும். ஒன்று, தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் பழகிக்கொள்வது எப்படி என்பது. மற்றொன்று கல்லூரியில் அல்லது பள்ளியில் ஆங்கில வழிக்கு மாறியதால் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி என்பது. இவ்விரண்டுக்கும் சிற்சில வித்தியாசங்கள் இருப்பினும் பல பயிற்சிகள் இரண்டுக்குமே உதவி செய்யும்.

முக்கியமாக இன்னொன்றை இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இப்புத்தகத்தில் எங்குமே நாம் ஆங்கிலத்தை சொல்லிக்கொடுக்கப் போவதில்லை! ஆங்கில இலக்கணம் பற்றிப் பேசி உங்களை ரம்பம் போடப் போவதில்லை! முழுக்க முழுக்க நீங்களேதான் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். இப்புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டுமே.

ஒரு இனிப்புச்செய்தி! நீங்கள் தமிழ் வழியில் இவ்வளவு நாட்களாக படித்ததுதான் மற்றவர்களை விட நீங்கள் அதிக ஆங்கிலப்புலமை பெற உதவப்போகிறது. ஆம், மொழித்திறனுக்கென மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது. எந்த மொழியாயினும், மூளையின் அப்பகுதி எப்படி அமைந்துள்ளது, அப்பகுதியை நீங்கள் எப்படி பழக்கி வைத்துள்ளீர்கள் என்பதுதான் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் புதிய மொழியிலும் உங்கள் திறனை நிர்ணயிக்கப் போகிறது!  நீங்கள் தாய்மொழியில் படித்துவந்ததால் தமிழை நன்கு கற்றிருப்பீர்கள். மொழியை சரியாகவும் லாவகமாகவும் எப்படி பயன்படுத்துவது என்பது இயல்பாகவே உங்களுக்கு வந்திருக்கும். இலட்சக்கணக்கான சொற்களும் அவற்றின் பொருள்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனபதால் இணையான சொற்களை சொற்றொடர்களை அடையாளம் காணுதலும் பயன்படுத்துதலும் உங்களுக்கு எளிதாக கைவரப்பெறும். எளிதான சொற்றொடர்களை அமைத்து பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாமல் செம்மையான சொற்றொடர்களையும் உங்களால் அடையாளம் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் முடியும். உதாரணமாக, ‘ரமேஷ் அதிக மகிழ்ச்சி அடைந்தான்’ என்பதற்கு இணையாக ‘ரமேஷ் பேரின்பம் அடைந்தான்’ என்பதை உங்களால் புரிந்து கொள்ளவும் அல்லது நீங்களாக அச்சொற்றொடரை அமைக்கவும் முடியும். அத்திறன் ஆங்கிலத்தில் ‘very happy’என்பதற்கு பதிலாக ‘ecstasy’ என்ற சொல்லை பயன்படுத்த காரணியாக இருக்கும்.


இப்போது உங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்து இருக்கிறது அல்லவா? நீங்கள் இப்புத்தகத்தை படிக்கத் துவங்கியிருப்பதே உங்களின் ஆர்வத்தைக் காட்டும் நல்ல முதல் படி. வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.

புதன், 26 டிசம்பர், 2012

நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்க்கிறோமா?


நம் பிள்ளைகளை நாம் ஒழுங்காக வளர்க்கிறோமா?
             அன்பர்களுக்கு வணக்கம், கடந்த பதிவில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பிய பிரிவில் படிக்க விடுங்கள் எனக் கூறியிருந்தேன். அதனை படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி படித்து விடுங்கள்.


படித்து விட்டால்தான் ஒரு தொடர்ச்சி இருக்கும். சரி விசயத்திற்கு வருவோம். பிள்ளைகளுக்கு பிடித்த பிரிவில் சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அவர்களுக்கு தானாக படிக்க ஆர்வம் வருமா? அதுவும் இப்போதிருக்கும் சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு எப்படி தவறு செய்யலாம்? என்பதை சொல்லித்தரும் காரணிகள் தான் அதிகம், உதாரணம் ஊடகத்துறை.


 எனக்கு ரொம்ப நாளாக பெற்றவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி உள்ளது, யாராவது பிள்ளையிடம் எதற்காக படிக்கிறோம் என்று விளக்கியதுண்டா? பேச்சுவாக்கில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதை தவிர, படிப்பு எதற்காக என்று பிள்ளைகளுக்கு விளக்கியதுண்டா? சரி ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் இருந்திருந்தால் எடுத்து சொல்லாமல் இருந்திருப்பீர்கள், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


பெரும்பாலான பெற்றோர்கள் படிப்பதை கவுரவத்தின் அடையாளமாகவும், வேலைக்கு செல்வதற்கான தகுதியாகவும்தான் பார்க்கிறார்கள், அதனால் தான் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை பார்ப்பவர்கள் அவனது பொது அறிவு மற்றும் பண்பாடு, ஒழுக்கங்களை பெரிதாக கவனிப்பதில்லை.


முதலில் கல்வி எதற்கு என்றால் பிள்ளைகளுக்கான தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவும், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளவும்தான், இப்போதுள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன, அதற்கு ஒரு வகையில் பெற்றவர்களாகிய நாமும் ஒரு காரணம்.


நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் வாங்கினால் போதுமா? தான் வாழும் ஊரின் பின் கோடு தெரியாமல் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு வங்கிக்கு சென்று காசோலை மாற்ற படித்த பிள்ளைகள் தயங்குகிறார்கள்? ஒரு அரசு அலுவலகத்துக்கு போய் ஏதேனும் ஒரு வேலையாக விண்ணப்பம் எழுத அது போல் மாதிரி ஏதேனும் இருந்தால் குடுங்கள் என்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக வழியில் யாருக்கேனும் அடிபட்டால் கண்டும் காணாமல் வரவும், பிரச்சனை என்றால் அதில் சிக்காமல் ஒளிந்து கொள்ளவும் தான் கற்றுக் கொள்கிறார்கள். கற்றவன் மற்றவர்களுக்கு மாதிரியாக இருக்க வேண்டாமா? ஓட்டு போட சலிப்பாக வீட்டிலேயே அமர்ந்து கொண்டு மற்றவர்களை குற்றம் சொல்லத்தான் அவர்களை படிக்க வைத்தோமா?


படிக்கின்ற பிள்ளைகளுக்கு முதலில் தன்னம்பிக்கை, ஒழுக்கம், பண்பாடு, நாட்டுப்பற்று அவசியம் பயிற்றுவிக்க பட வேண்டும், இவைகள் இப்போது எந்த நிறுவனங்களும் சொல்லியும் தருவதில்லை. புத்தகத்தில் இருப்பதை மட்டும்தான் கற்று தருகிறார்கள். வேலைக்கு எப்படி செல்வது என்பதை பணம் வாங்கிக் கொண்டு கற்று தருகிறார்கள். 

இதற்கு தீர்வு நம் கையில் தான் இருக்கிறது, நம் பிள்ளைகள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் என்ன செய்கிறான் என்பதை விழிப்போடு கவனியுங்கள், நம் பிள்ளை முதல் மதிப்பெண் மட்டும் பெற்றால் போதாது, நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் நெஞ்சில் பதியுங்கள்.


தினசரி செய்திகளை பிள்ளையுடன் விவாதியுங்கள், அவனுக்காக நீங்கள் சினமாவையும் பார்க்கலாம், அப்போதுதான் அவன் உங்களுக்காக செய்திகளை பார்ப்பான். சின்ன சின்ன பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள், சின்ன பசங்க, படிக்கற பசங்களுக்கு என்ன தெரியும்னு நினைக்காம எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக் குடுக்க ஆரம்பிங்க.


பிள்ளைங்க மேல முழுசா நம்பிக்கை வைக்கறது தப்பு இல்லை, அதுக்குனு அவனை கைக்கழுவி விடறதுதான் தவறு, அவன் படிப்பை பற்றி பேசுங்கள், உங்கள் வேலை மற்றும் தொழிலை பற்றி அவனிடம் விவாதியுங்கள். முதலில் உங்கள் குடும்ப கஸ்டங்களை அவனுக்கு தெரிய படுத்துங்கள், அப்போதுதான் அவனுக்கு அவன் பொறுப்பு புரியும்.

உங்கள் வீட்டு பிரச்சனை மட்டுமல்ல, நாட்டு பிரச்சனையையும் தீர்க்க போவது அவன் தான், அவனது தலைமுறைதான் என அவர்களுக்கான கடமையை முதலில் அவர்களுக்கு உணர்த்துங்கள், அவர்கள் புரிந்து கொண்டதும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள், எப்படி செய்ய வேண்டும் என்பதை அவனே சிந்தித்து கொள்வான். 

நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளையிடம் நண்பனாக பழகி நல்லவைகளை குருவாக கற்று தர வேண்டியதுதான்.

மேல கூறிய அனைத்தும் என் கருத்துக்களே, ஏதேனும் பிழை இருப்பின் தெரிவியுங்கள். நம் பிள்ளைகளின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள்


உங்கள் பிள்ளையின் வாழ்க்கையை நீங்கள் வாழாதீர்கள்


அன்பர்களுக்கு வணக்கம், இன்று முதல் மக்கள் சந்தையின் மூலமாக தினமும் உங்களை சந்திக்க போவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திடும் இந்த முயற்சியில் ராமாயண அணிலாய் என் பங்கும் இருக்கும் என நம்புகிறேன். இறைவனை மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டு துவங்குகிறேன்.

நம் தேசத்து இளைஞர்களுக்கு(என்னையும் சேர்த்துதான்) ஒரு பெரிய கெட்ட பழக்கம் இருக்கிறது. அது கிட்டத்தட்ட அடிமைத்தனம் போன்றதொரு பழக்கம், அதுதான் தனித்தன்மையற்று இருப்பது. எதை பற்றி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கொஞ்சம் கொஞ்சமாய் புரியும், தொடருங்கள்.


நம் நாட்டில் ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து படிப்பை முடித்து வேலைக்கு போகும் வரை ஏன் கடைசி வரையுமே எப்படி வளர்ந்து வாழ்கிறது தெரியுமா? அடுத்தவர்களின் ஆசைப்படி தான், நான் அடுத்தவர்கள் என்று அழைப்பது பெற்றவர்களை அல்ல, மற்றவர்களை. 

உதாரணத்திற்கு ஒரு இடைத்தர வர்க்கத்தில் ஒரு பையனை முதலில் பள்ளியில் சேர்த்துவதாக இருந்தால் என்ன யோசிப்பார்கள்? பக்கத்து வீட்டு குழந்தை எங்கு படிக்கிறது என்றுதான், அதில் தவறில்லை, ஆரம்பத்தில் ஒரு துணைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இருக்கலாம்.

போகப்போக அந்த பையனின் மதிப்பெண்கள் பக்கத்து வீட்டு பையனுடன் ஒப்பிட்டுதான் நல்ல மதிப்பெண்ணா என்ற முடிவுக்கே வரும். அதுவும் தவறில்லை, சிறு வயது, ஒரே படிப்பு என விட்டு விடலாம்.

  

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் வரும் பாருங்கள் ஒரு பிரச்சனை, எத்தனை வீட்டில் பிள்ளைகளின் விருப்பத்திற்கு கல்லூரியில் சேர்க்கிறார்கள்? குடும்ப ஏழ்மையின் காரணமாக முடியாமல் போகிறவர்களை நான் கேட்கவில்லை. படிக்கக் கூடிய பிள்ளையை கேட்காமல் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று ஏதோ ஒரு கல்லூரியில் சேர்க்கிறவர்களைத்தான் கேட்கிறேன்.

அப்படி எல்லாம் இந்த காலத்துல யாராவது இருப்பாங்களா? என்று நீங்கள் கேட்கலாம், நீங்கள் சந்தித்திருக்க மாட்டிர்கள், உங்கள் ஊர் கொஞ்சம் முன்னேறியதாக இருக்கும், நான் இருக்கும் பேரூராட்சியில் வாரம் ஒருத்தரையாவது இது போல் பார்க்கிறேன். அவர்கள் ஏமாற்ற படுகிறார்கள். 
அவர்கள் சொல்லும் புளித்து போன வசனம் "சின்ன பையனுக்கு என்ன தெரியும்?"


நான் ஒரு தொழில் நுட்ப கல்லூரியில் பணியாற்றுகிறேன், அருகில் இருக்கிற காரணத்திற்காக எங்கள் கல்லூரியில் சேர்க்க வரும் பெற்றோர்கள்  பிள்ளைகளை கேட்காமல் மற்றவர்கள் பேச்சை கேட்டு "எவ்வளவு செலவானாலும் பராவாயில்லங்க, என் பையனை மெக்கானிக்கல் குருப்ல சேர்த்து விடுங்க" என்பார்கள்.

அவர்கள் படிக்காதவர்கள், தெரியாமல் கேட்கிறார்கள், பிள்ளைகளும் என்னவென்று தெரியாமல் சேர்ந்து கொண்டு சிலர் படிக்க முடியாமல் திணறுகிறார்கள், காரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

சிலருக்கு கணிதம் பிடிக்கும், சிலருக்கு இலக்கியம் பிடிக்கும், சிலருக்கு படம் வரைய பிடிக்கும், டிப்ளமோ என்றால் மெக்கானிக் என்று விசாரிக்காமல் சேரும் மாணவர்களில் பலர் அதில் இருக்கும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார்கள். உங்களுக்கே தெரியும், தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் கடைசியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று?

இதற்கு தீர்வு கல்லூரிகளின் கையிலும் பெற்றாவர்களின் கையிலும் தான் இருக்கிறது. முதலிம் பெற்றவர்கள் தாங்கள் படிக்காதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு படிக்க போகும் பிள்ளையை அழைத்து கொண்டு நேரே கல்லூரிக்கு சென்று என்னென்னெ பிரிவுகள் இருக்கிறது என்று விசாரித்து விட்டு அதில் வரும் பாடங்கள் எவ்வாறு இருக்கும் என பிள்ளையை விட்டு கேட்க சொல்லுங்கள், எந்த பிரிவில் சேர விரும்புகிறான் என்று முடிவை அவன் கையில் விடுங்கள்.வேலை வாய்ப்பு எல்லா பிரிவுக்கும் சமம்தான், மெக்கானிக் என்பதற்காக தேர்ச்சி பெறாத மாணவனுக்கு எந்த நிறுவனமும் வேலை தரப் போவதில்லை.பெரும்பாலான கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கு தயாராகிவிட்டன.


பெற்றோர்களே நீங்கள் தயாரா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யட்டும். நீங்கள் அவர்களுக்கு காட்டுங்கள், ஊட்ட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் விருப்பப்படி இருக்கட்டும்.

எவ்வாறு ஆர்வமுடன் படிப்பது என்பதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

புதன், 12 டிசம்பர், 2012

" மாதவிடாய் " ஆவணப்படம்


மாதவிடாய் இந்த வார்த்தையை உபயோகிப்பதையே கேவலமாக நினைத்த சமூகம் நம் சமூகம். இதற்கு அந்த 3 நாட்கள், வீட்டுக்கு தூரம் என்று பல கேவலமான பெயர்கள் இட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு செல்வந்தாரக பிறந்தாலும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள் இதை மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில் இன்று இந்த கொடுமைகள் மறந்து இன்று நாப்கின் அறிமுகப்படுத்ப்பட்டு ஒரளவிற்குத்தான் மக்கள் இதை பின்பற்றுகின்றனர். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் அந்த 3 நாட்களுக்கு மட்டும் என நாப்கின் விளம்பரம் வரும் போது என்ன ஏதுவென்று தெரியாமல் விழிபிதுங்கியவர்கள் தான் ஏராளம்.

பெண்களை விட ஆண்களுக்கத்தான் இதில் விழிப்புணர்வு தேவை என்று மாதவிடாய் என்று பெயரிட்டு ஆண்களுக்காக ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார்கள் முகநூலில் நான் அண்ணன் என்று அன்போடு அழைக்கும் இளங்கோவனும் அவரின் மனைவி கீதாவும்.

இந்த படத்தின் இயக்குநர் கீதா அவர்கள் மாதவிடாய் என்று படத்திற்கு  பெயரிட்டதற்கே அவரை பாரட்ட வேண்டும்...

இந்த ஆவணப்படம் ஆண்களின் விழிப்புணர்வுக்குத்தான்.. இந்த ஆவணப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

இந்த படத்தை பற்றி பிரபலங்களின் கருத்துக்கள் முகநூலில் இளங்கோவன் மற்றும் நண்பர்கள் பதிந்தது...


தாய்வழிச்சமூகத்தின் விழுதுகள் பாய்ந்திருக்கும் சில இனக்குழுக்களுக்கிடையே இன்றும் மாதவிடாய் மதிப்புமிக்கதாகவும், வளமைக்கு அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா என்னும் காளி மாதா கோவிலில் அம்மனின் மாதவிடாய் ரத்தமே பிரசாதமாக கொடுக்கப்படுவதாக ஐதீகம் இருக்கிறது.

தாந்திரிக முறை வழிபாட்டிலும் கூட யோனியும், மாதவிடாயும் வழிபாட்டுக்குரிய சங்கதிகளாகவே கருதப்படுகின்றன.
கடவுளோ, மத நூலோ மாதவிடாயை வெறுக்கும் படியோ, அதன் காரணமாய் பெண்களை ஒதுக்கிவைக்கும் படியோ சொன்னதில்லை.

பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமுதாயமே மாதவிடாய் பற்றிப் பொய்யும், இழிவுமான கற்பிதங்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.
துணியோ, நாப்கினோ...ஒழித்து வைத்துப்பயன்படுத்தும் நிர்பந்தம் எதற்கு பெண்ணுக்கு?

ஆண் ரேசர் வாங்கிச்சவரம் செய்யக் கூச்சப்படுகிறானா என்ன?
மாதவிடாய் பெண்களை தனிமைப் படுத்திக் கொடுமை செய்யும் "முட்டு வீடுகள்" இன்றைக்கும் நம் கிராமங்களில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
மாதவிடாய் சமயத்திலும் மோனோபாஸ் சமயத்திலும் பெண்களுக்கு உளவியல்ரீதியான சிரமங்கள் நேரும் . அதன் விளைவாக காரணமே இல்லாமல் கூட எரிச்சல்படுவதும் சில பெண்களின் இயல்பாய் இருக்கும் என்ற மருத்துவ உண்மை எத்தனை ஆண்களுக்குத் தெரியும்?
"அரசு அலுவலகங்களிலுள்ள கழிப்பறைகளில் பெண்களின் மாதவிடாய் தேவைக்கான வசதிகள் என்ன ஏற்படுத்தித்தரப்படுகின்றன?" -என்ற கேள்வியை , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய அரசின் கட்டிடங்கள் கட்டும் அரசு நிறுவனமான சிபிடபிள்யூடி யிடம் கேட்ட போது, அப்படி எந்த வசதியும் செய்யப்படுவதில்லை என்றே பதிலாகக் கிடைத்துள்ளது.
 வீட்டிலிருக்கும்-அலுவலகத்திலிரருக்கும் பெண்களைக் காட்டிலும் பொதுவெளியில் களப்பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பெரும் சவாலாக இருக்கிறது.

கழிப்பறை வசதிகள் இல்லாத சூழலில் எல்லாம் பணியில் கவனம் குறைந்திட அவளுடைய பணித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடுகிறது.
 மாதவிடாய் ரத்தம் அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ அல்ல.

தாய்ப் பாலைப் போன்று பெண்ணின் உடம்பில் ஊறும் ரத்தத்தில் உருவாகும் இன்னொரு இயற்கையான சங்கதி.

சமீபத்திய ஸ்டெம் செல் ஆய்வுகள் இந்த ரத்தத்தின் மூலம் குணப்படுத்த முடியா மனித நோய்கள் பலவற்றைக் குணப்படுத்த முடிவதாய் கண்டுபிடித்துள்ளன.

எனவே மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் உருவாகியுள்ளன.
"ஒரு பொது இடத்திலோ....மேடையிலோ....யாராவது என்னைக் கவனித்து " அம்மா....உங்க ஆடையில கறை...." என்று சொல்லத் தொடங்கினால் ஏதோ கொலைப்பாவம் செய்த மாதிரி ஒரு குற்றவுணர்வு......

எங்கிருந்து வருகிறது இந்தக் குற்றவுணர்வு....?

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கே இப்படியொரு குற்றவுணர்வு என்றால் சராசரிப் பெண்களின் நிலை என்ன?"

உங்களின் அன்பு மகளுக்காக நகையும் விலை உயர்ந்த ஆடைகளும் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால் அந்தக்குழந்தை சரியான கழிப்பறை வசதியில்லாத பள்ளியில் நாப்கின் மாற்ற முடியாமல் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் சொல்லொண்ணா கொடுமையை அநுபவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?‘
சட்டங்களை இயற்றும் சட்ட மன்றத்திலும் சரி. அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசு அலுவலகங்களிலும் சரி. மாதவிடாய் காலத்துப் பெண்களின் தேவையை மனதில் கொண்டு கழிப்பறையில் எந்த வித வசதியும் செய்யப்படவில்லை. அப்படியொரு சிந்தனையும் இல்லை என்கிறார்.
- மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி.
 பயன்படுத்திய நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவதால் டாய்லெட் அடைத்துக்கொள்கிறதுதான்....

ஆனால் பெண்கள் நாப்கினை அப்புறப்படுத்த வேறு வழி என்ன கொடுத்திருக்கிறோம்?
 இந்தியாவில் சுமார் 80% பெண்கள் மாதவிடாய் சமயத்தில் துணியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாய் அடித்தட்டுப் பெண்கள்.

அதில் தவறொன்றும் இல்லைதான்.

என்றாலும் துணியை ஆண்களுக்குத் தெரியாத வண்ணம் சுத்தப்படுத்தி உலர்த்திப் பயன்படுத்தவேண்டுமே என்ற சமூக நிர்பந்தம் காரணமாய் சரிவர சுத்தப்படுத்தாமலும், சரிவர உலர்த்தாமலும் பயன்படுத்துவதால் அதுவே பெரும்பாலான நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடுகின்றது.
"துப்புரவுப்பணி என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணி"- என்ற சமுதாயத்தின் ஆதிக்க எண்ணமும் கூட கழிப்பறையில் எந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் நவீன முறையைக் கொண்டுவருவதற்கு ஒரு வகையில் தடையாக நிற்கிறது.

அதனாலேயே பெண்களின் அத்தியாவசியத் தேவையான கழிப்பறை சீர்திருத்தமும் தடைப் பட்டு நிற்கிறது.
  "ஜாதிக் கலவரத்தை கட்டுப்படுத்தி பந்தோபஸ்த்து டியூட்டில இருக்கிற பெண் காவலர் படுற சிரமம் மத்த வேலைகளுக்குப் போகும் பெண்களின் சிரமத்தை விட கொடுமையானது.

ரெண்டு ஜாதியில் எந்த ஜாதி வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தினாலும் அந்த ஜாதிக்குத்தான் காவல்துறை சப்போர்ட் பண்ணுறாங்கன்னு அடுத்த ஜாதிக்காரங்க கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க"
- திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு)
 
 "கழிப்பறை/ தண்ணீர் வசதி இல்லாததால் நாப்கின் மாத்த முடியாது. நாப்கின் மாத்த முடியாததால் சிறு நீர் கழிக்க முடியாது. சிறு நீர் கழிக்க முடியாததால் பகல் முழுக்க தண்ணீர் குடிக்க மாட்டோம்....தண்ணீர் குடிக்க முடியாது என்பதால் நாள் முழுக்க சாப்பிடவும் மாட்டோம்."

உங்கள் குழந்தைகள் மதியம் சாப்பிடாமல் டிபன்பாக்ஸை அப்படியே வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் போது, அதற்குள் இப்படியும் ஒரு காரணம் இருக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரு ஓரங்களில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வறுமை காரணமாய் நாப்கினோ- துணியோ பயன்படுத்தும் வசதி இருக்காது.

சுத்தப்படுத்திக் கொள்ளவும் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதன் காரணமாய் தொற்றும், சமயங்களில் கர்ப்பைப்பை புற்று நோய் நேரவும் இந்த சுத்தமின்மை காரணமாகிவிடுகிறது.
மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என்ற வரிசையில் மாதவிடாய் என்பதையும் "பொம்பளைங்க சமாச்சாரம்" என்று விலகியும், விலக்கியும் வைப்பது ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கிறது. 

ஆனால் இது ஆண்மைக்கான அழகல்ல.

மேற் சொன்ன அனைத்து காரியத்திலும் ஆணுக்கும் பொறுப்பு உண்டு.

இதனால்த்தான் "மாதவிடாய்"- ஆவணப்படமும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான படமாய் அமைந்தது.

எப்படியோ, இதற்கான அழைப்பிதழில் அந்த முக்கிய சங்கதி விட்டுப் போனதை இப்போதுதான் கவனித்தோம்.

எனவே " ஆண்களுக்கான பெண்களின் படம்", " A film by Women for Men" என்ற திருத்தத்தை உள்ளடக்கி அழைப்பிதழை மீண்டும் முன்வைக்கிறார் இளங்கோவன்..
இந்த ஆவணப்படம் வெற்றியடைந்து பல விருதுகளை பெறும் அதை விட இதைப் பார்த்து விழிப்புணர்வால் இந்த இயற்கை குருதியில் இருந்து சுகாதரமாக தன் மனைவியை கணவன்மார்கள் பாதுகாத்துக்கொண்டால்
அது தான் மிகப்பெரிய விருது...

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?


   
சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...

எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..

நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..

என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.

                             



ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:

நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:

திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.

                                       


முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து காணொளியின் பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.

       
                                             

இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

கம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

கம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

கம்ப்யூகம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்ட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்

   

கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் 

மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருதுகிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.

1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: 

பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய  தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல்களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த
பழக்கம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை அனுப்பித்
தகவல்களைத் திருடுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. நமக்கு வேதனை தரும் விஷயமாக மாறுகிறது. சீனாவில், ஒருவரின் வீடு, அவர் பேஸ்புக் தளத்தில் இந்த வகையில் நட்பு  ஏற்படுத்திக் கொண்ட ஒருவராலேயே கொள்ளையடிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் தன்னைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் பலவற்றைத்தந்ததுதான்.

2. நிறுவன தளங்களில் கட்டுப்பாடு: 

நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவன இணைய தளம் மிகவும் பாதுகாப்பானது என்பதால், தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும், தங்களின் பாஸ்வேர்ட், நிதிநிலை போன்ற தகவல் களையும், பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் சம்பந்தப் பட்டவர்களின் தனிச் சொத்து. எனவே நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பினை நம்பி தகவல்களைத் தருவது, ஆபத்தை வரவழைக்கும் செயலாகும். ஏனென்றால், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அனைத்து இணையதளங்களும் பாதுகாப்பு அற்றவையே. மேலும் நிறுவன தளங்களின் பாதுகாப்பு குறித்து, நாம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

3. ஆபத்தான வெப் லிங்க்: 

இணைய தளங்களில்,மின்னஞ்சல்களில் தரப்படும் இணைய தளங்களுக்கான 
லிங்க் எனப்படும், சிறிய அளவிலான இணைய முகவரிகள் என்றுமே ஆபத்தானவை. குறிப்பாக, இணைய சமுதாய தளங்களுக்கானவை என்று தரப்படும் சிறிய லிங்க்குகளில் பெரும்பாலானவை ஆபத் தானவை என்று 
கண்டறியப் பட்டுள்ளது. இவற்றில் கிளிக் செய்தால், நாம் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்குப் பதிலாக, ஆபத்தைத் தரும் பிற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். எனவே, இணைய தளங்களில், அல்லது இந்த தளங்கள் அனுப்பியதாகப் பெறப்படும் லிங்க்குகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான முகவரிகளை டைப் செய்வது சிரமமாக இருந்தாலும், அவ்வாறு டைப் செய்தே அந்த தளங்களுக்குச்செல்ல வேண்டும்.

4. அபாயங்கள் குறித்து கற்றுக் கொள்ளுதல்:

இணையத்தில் நம்மைச் சிக்கவைக்கும் அபாய வழிகள் குறித்து பலர் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழப் பழகிக் கொண்டவர்கள்,தாங்கள் பயன்படுத்தும் இணைய தளங்களும் பாதுகாப்பானவையே என்ற எண்ணத் தில் உள்ளனர். இது  தவறான முடிவாகும். இணைய எச்சரிக்கை குறித்து தரப்படும் செய்திகளை அலட்சியம் செய்கின்றனர். இது  தவறு. இணையம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஓர் இடம். இங்கு பாதுகாப்பு என்பது ஒரு சமுதாய விஷயமாகிறது. எனவே இது குறித்து நன்கு அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும்  பின்பற்ற வேண்டுவது நம் கடமையாகிறது.

5. அப்டேட்டிங் சாப்ட்வேர்: 

இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவபவர்கள், பாதுகாப்பிற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை தங்கள் கம்ப்யூட்டர் களில் இன்ஸ்டால் செய் வதில் சிறிது கூட  தாமதப்படுத்துவதில்லை. ஆனால் அதன் பின்னர் அவற்றை அப்டேட் செய்வதில் மிகவும் பின்தங்கிவிடுகின்றனர். பலர் அது குறித்து எண்ணுவதே இல்லை. இந்தப் போக்கும் பழக்கமும் மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்று விக்கும்.

6. மால்வேர் எப்போதும் வரும்: 

பலர், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படும் என்று எண்ணுகின்றனர். இது தவறு. விடுமுறை நாட்களிலும், சில விழா கொண்டாட்டத்தின் போதும், இந்த மால்வேர் புரோகிராம்கள் அதிகமாகத் தென்பட்டாலும், இவை 24 மணி நேரமும் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து பெருகி நாசம் விளைவிக்கும் தன்மை கொண்டதாகவே இயக்கத்தினைக்கொண்டுள்ளன. எனவே நாமும் முழு நேரமும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டியுள்ளது.

7. திருட்டு சாப்ட்வேர் தரவிறக்கம்: 

ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் கம்ப்யூட்டர்  பயன் படுத்துபவர்கள், இலவச மற்றும் விலை மலிவான சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்வதில்  மிக ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரும் பிரபலமில்லாத இணைய தளங்கள், இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுடன், தங்களுடைய மால்வேர் புரோகிராம்களையும் இணைத்தே  அனுப்புகின்றன. சாப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்கள் கழித்து, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் வேலையைக் காட்டுகின்றன.

8. ஒரே பாஸ்வேர்ட்: 

பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால், பலர் ஒரே பாஸ்வேர்டினை அனைத்து தளங்களுக்கும் வைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இதனால், ஒரு இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட் கைப்பற்றப் பட்டாலும், மற்றவற்றையும் கெடுப்பது மால்வேர் அனுப்பியவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே சிரமம் எடுத்தாவது, ஒவ்வொரு இணைய தளத்திற்கும் தனித்தனி பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

9:அவசரப்படுவது: 

தங்களுக்குத் தகவல்கள் அவசரமாகத் தேவைப்பட்டு, இணையத்தில் தேடும்போது,  பலர், சில இணைய தளம் குறித்து சந்தேகம் அடைந்தாலும், நம் கம்ப்யூட்டரை இவை என்ன செய்து விடும் என்ற இறுமாப்பில், பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இவர்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை ஏமாற்றி நாசப்படுத்தும் வைரஸ்களும் உண்டு என இவர்கள் அறிவதுஇல்லை. இது போல, பல பழக்கங்களுக்கு நாம் அடிமையாகி, நம் பாதுகாப்பினை மறந்து விடுகிறோம். இதனால், நம் கம்ப்யூட்டர் முடங்கும்போதுதான், அடடா! அவசரப் பட்டுவிட்டோமே என்று வேதனைப் படுகிறோம். 

பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்