சனி, 30 ஜூன், 2012

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கு பணியிட மாறுதல்

சென்னை: தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.


இதுகுறித்த விவரம்:

பள்ளிக் கல்வித்துறை

தேதி கவுன்சிலிங் விவரம்
13, 14.7.12 மாவட்டத்திற்குள் பணி நிரவல்
16, 17.7.12 பணி நிரவல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
23.7.12 மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம்
24.7.12 பணியிட மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
27.7.12 ஆசிரியர் பயிற்றுனர்கள் - பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல்
30, 31.7.12 பட்டதாரி ஆசிரியருக்கான (தமிழ்) பதவி உயர்வு
30.7.12 இதர பாட ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு

தொடக்கக் கல்வித்துறை

21.7.12 காலையில், பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
21.7.12 பிற்பகலில், பொது மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்
22.7.12 பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
28.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - ஒன்றியத்திற்குள்
29.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்
31.7.12 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல், பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.

வியாழன், 14 ஜூன், 2012

குழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு!



குழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு!-14-06-2012

எழுத்தின் அளவு :
ஒரு குழந்தை கல்வி கற்பதை, பெற்றோர்கள் அடிக்கடி, பள்ளியுடன் தொடர்புபடுத்துகின்றனர். ஏனெனில், பள்ளி செல்லும் வயதை அடைந்தவுடனேயே, குழந்தைகள், கல்வியறிவை பெற தயாராகி விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கருதுவதே இதற்கு காரணம்.
ஆனால், பலரும் உணரத் தவறுவது என்னவெனில், ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடானது, அது கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகிறது என்பதைத்தான்.
கல்வியறிவு என்பதைப் பற்றி நிபுணர்கள் கூறுவதை நாம் இங்கு பார்க்கலாம். ஒருவரின் கல்வியறிவு என்பது பற்றி சுருக்கமாக கூறுவதென்றால், அவர், படித்தல், எழுதுதல் மற்றும் குறியீட்டு அமைப்புகளை பயன்படுத்த தெரிந்திருத்தல் போன்றவையே ஆகும். அதேநேரத்தில், இதையே சற்று விரிவாக கூறுவதென்றால், தகவல்தொடர்பு - பேசுதல் மற்றும் கவனித்தல் ஆகிய செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. மேலும் இவற்றில், தொழில்நுட்பம், கணிதஅறிவு மற்றும் கலாச்சார அறிவு போன்றவையும் அடங்கும்.
அதேசமயம், கல்வியறிவு என்பதற்கு அகராதி தரும் அர்த்தம் இன்னும் சற்று வித்தியாசமானது. எழுதுதலும், படித்தலும், பயன்பாட்டுக் கல்வியறிவைக் குறித்தாலும், கல்வியறிவு என்பது, அர்த்தம் உருவாக்குதல், நாம் வாழும் உலகைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுதல், நாம் என்ன பார்க்கிறோம், படிக்கிறோம் மற்றும் எழுதுகிறோம் என்பதை பிரதிபலித்தல் மற்றும் ஒருவரின் சொந்த இயல்பார்ந்த அறிவுத்திறன் குறித்த சிந்தனையில் ஈடுபடுதல் போன்ற விளக்கங்கள் தரப்படுகின்றன.
நாம் இங்கே, கைக்குழந்தைகள் மற்றும் இளங்குழந்தைகளில், மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாடு எவ்வாறு நிகழ்கிறது மற்றும் அதுதொடர்பாக, பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளோம். சுருக்கமாக சொல்வதென்றால், மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாடு என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
புகழ்பெற்ற ரஷ்ய உளவியல் நிபுணர் வகாட்ஸ்கி என்ன கூறுகிறார் என்றால், "குழந்தைகள் தங்களது கைகளை வெறுமனே இப்படியும், அப்படியும் அசைப்பதானது, ஒரு முக்கியமான செயல்பாடாகும். சத்தங்களை சரமாக கோர்த்து, வார்த்தைகளை உருவாக்கும் பயிற்சியாகும் இது. இந்த செய்கையானது, பிற்காலத்தில், எழுதுதல் மற்றும் புத்தகங்களைப் பிடித்தல் போன்ற கட்டுப்பாடான செயல்பாடுகளுக்கு இட்டு செல்கிறது. மேலும், பேச்சு வடிவங்களில் ஒரு குழந்தை பெறும் நிபுணத்துவமே, அதனுடைய சிந்தனையின் அடிப்படை வடிவங்களாக ஆகின்றன. இதன்மூலம், ஒரு குழந்தையின் பேச்சை, அதன் உள்ளார்ந்த திறன் வளர்ச்சியுடன் சம்பந்தப்படுத்தலாம்" என்கிறார்.
குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சி என்பது, அதன் பிறப்பிற்கு முன்பே, அதாவது, கருவிலிருந்தே தொடங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தாயின் கருப்பையில் இருக்கும் ஒரு கருவின் கேட்கும் திறன், 25 வாரங்கள் ஆகும்போது, மேம்படுகிறது. இதன்மூலம், ஒரு குழந்தை, உலகத்திற்குள் வரும் முன்பாகவே, அதைப்பற்றிய விஷயங்களை உள்வாங்குகிறது.
இந்த உலகில் பிரவேசித்த புதிதில், தனது தேவைகளை கேட்க, அழுகை போன்ற முறைகளில் ஒலியெழுப்புகிறது. இதை பெற்றோர்கள், ஒரு யூகமாக புரிந்துகொண்டு வினையாற்றுகிறார்கள். கைக்குழந்தைகளும், சிறு குழந்தைகளும், தங்களது பெற்றோர் பேச்சும் பேச்சுக்களை கூர்மையாக கவனிக்கிறார்கள் மற்றும் மொழியில் பயன்படுத்தப்படும் ஒலிப்புகளையும், ஒலிகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும் பற்றி புரிந்துணர்வுகளை அவர்கள் மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
பழக்கமான ஒலிகளையே, ஒரு குழந்தை திரும்ப திரும்ப கேட்கையில், அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், அலட்சியம் செய்கிறது. ஆனால், ஒரு புதிய வகையான ஒலியை எழுப்பும்போது, ஆர்வத்துடன் கவனிக்கிறது மற்றும் அந்த ஒலி வரும் திசையை நோக்கி திரும்பிப் பார்க்கிறது. இதைத்தவிர, சமூக முக்கியத்துவம் பெறும் வகையில், தகவல்தொடர்பு செயல்பாட்டில், முக்கியத்துவம் பெறும் ஒலிகளையும் பிரித்து அறிந்துகொள்கிறது ஒரு குழந்தை.
பிரிண்ட் செய்யப்பட்ட குறிப்புகளை, குழந்தைகள் கிரகித்து, தங்களுக்குள் பதிவுசெய்து கொள்கிறார்கள். ஒரு உள்ளடக்கம் அல்லது பார்முலாவைப் பற்றி பெரியவர்கள், ஒரு குழந்தையிடம் பேசுகையில், அவற்றுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதில் குழந்தைகள் ஈடுபடுகிறார்கள்.
சில நேரங்களில், குழந்தைகள், பேப்பருடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அந்த பேப்பரை, கிழித்தோ, அதில் கிறுக்கியோ, அதை நீரில் நனைத்தோ விளையாடுவார்கள். இத்தகைய செயல்பாடுகளின் மூலம், ஒரு பேப்பரின் தன்மைகள் குறித்து அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேலும், ஒரு செய்தித்தாளையோ அல்லது பத்திரிகையையோ குழந்தைகளுக்கு படித்துக் காட்டுகையில், குழந்தைகள், அந்த பத்திரிகையை அல்லது செய்தித்தாளை எவ்வாறு பிடித்து, எவ்வாறு வசதியாக அமர்ந்துகொள்வது போன்ற உடல் மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள்.
மேலும், இடமிருந்து வலமாக படிக்க வேண்டுமா அல்லது வலமிருந்து இடமாக படிக்க வேண்டுமா என்பதை கற்றுக்கொள்வதோடு, பக்கங்களை ஒவ்வொன்றாக திருப்பும் வித்தையையும் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு வகையில் சொல்வதென்றால், இந்த உலகில், தான் செயல்படுவதற்கான அனைத்துவகை தகவல்கள் மற்றும் திறன்களை ஒரு குழந்தைப் பெற்றுக்கொள்கிறது.
குழந்தையின் மொழி மற்றும் கல்வியறிவு மேம்பாட்டை, பெற்றோர்கள் எந்தளவு சிறப்பாக்க முடியும்?
குழந்தையிடம் பேசுதல்
ஒரு பெண் கருவுற்று இருக்கும்போதே, அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுதல், படித்தல் மற்றும் பாடுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்களின் குரல்களை, ஒரு குழந்தை, கருவில் இருக்கும்போதே அடையாளம் காணும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நம் கலாச்சாரத்தில், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியானது, குழந்தையின் கேட்கும் திறனை மேம்படுத்தும் செயல்பாட்டிற்கான ஒரு சிறந்த உதாரணம்.
தொடுதல் அனுபவம்
தொடுதல் மற்றும் உணர்தல் அனுபவங்களை, குழந்தைகளுக்கு வழங்குதல் மிகவும் முக்கியம். உதாரணமாக, சமையலறையில் சில பாதுகாப்பான பொருட்களை தொட குழந்தைகளை அனுமதிக்கலாம் மற்றும் மல்லிகை போன்ற மலர்களை முகர்ந்து பார்த்து அடையாளம் காணச் செய்து, அவர்களின் நுகர்தல் திறனை அதிகரிக்கலாம்.
உச்சரிப்பு(phonemic) தொடர்பான விழிப்புணர்வு
குழந்தையிடம், பேசுதல், படித்துக் காட்டுதல் மற்றும் பாடுதல் மிகவும் முக்கியம். மேலும், பெற்றோர்கள், sound games உள்ளிட்டவைகளையும் விளையாடுவது அவசியம். வெவ்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு சத்தம் எழுப்புகின்றன என்ற அறிவை குழந்தைகளுக்கு புகட்டுவதும் அவசியம்.
சுற்றுச்சூழல் கற்பிதம்
ஒரு குழந்தை அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள் சம்பந்தப்பட்டதாகும் இது. உதாரணமாக, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் மற்றும் அவர்களுக்கான பால்புட்டிகள் மற்றும் இதர உணவு டப்பாக்கள் ஆகியவற்றில் ஒட்டப்பட்ட லேபிள்கள் போன்றவை முக்கியமானவை. பெற்றோர்கள், இவற்றை படித்துக்காட்டி, அதுதொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
உரையாடுதல்
குழந்தைகளுடன் உரையாடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். உதாரணமாக, குழந்தையை குளிப்பாட்டுகையில், சோப்பு மற்றும் ஷாம்பு பற்றியோ, அதன் வாசனைப் பற்றியோ, நீரின் கொதிநிலைப் பற்றியோ அவர்களுடன் பேசலாம். அதேசமயம், இதற்கு, அவர்களுடைய பதிலுக்கும் நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். குளிக்கும்போது மட்டுமின்றி, அதைப்போன்ற ஒவ்வொரு தருணத்திலும், குழந்தையிடம், உங்களின் வேலையை செய்து கொண்டே, அதைப்பற்றி பேசலாம்.
ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டுதல்
குழந்தையிடம் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் இருவரும் எதிரே பார்க்கும் விஷயத்தைப் பற்றி, அதன் பெயர், நிறம், அம்சம், அளவு மற்றும் வடிவமைப்பு குறித்து குழந்தைக்கு விளக்கலாம். இதன்மூலம், குழந்தையின் அறிவு விரிவடைகிறது.
பாடல் மற்றும் விரல் விளையாட்டு
குழந்தைகளுக்கு, பாடல்களையும், நகர்வுகளையும் சொல்லித் தருவதன் மூலம், அவர்களின் வார்த்தை வள(vocabulary) அறிவு, மொழியறிவு மற்றும் மோட்டார்(motor) திறன்கள் போன்றவை மேம்படுகின்றன.
வார்த்தை வளம்
ஒரு சராசரி குழந்தை, தனது முதல் பிறந்தநாளின்போது, குறைந்தபட்சம் 50 வார்த்தைகளை தெரிந்திருக்கும். இந்த எண்ணிக்கை, 2ம் வருடத்தில் 300ஐ தொடும். எனவே, வார்த்தை வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழலை உருவாக்குவது, ஒரு குழந்தையின் மொழி மேம்பாட்டில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

வெள்ளி, 8 ஜூன், 2012

அடிப்படையில் மாற்றம் கூடாது


எக்காலத்திலும் மனிதனுக்கு வலிமை அளிக்கக்கூடிய கருவி கல்வி. கல்வி கற்பிக்கப்படும் முறையில் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
 மாற்றங்கள்தான் மாறாதது என்றாலும், பொருளின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால் அது வேண்டத்தகாத விளைவுகளைத்தானே உருவாக்கும். சுவாசிக்கும் காற்றில் மாற்றம் ஏற்படின் அது அனைத்து உயிரினங்களுக்குமே தீங்கை விளைவிக்கும். காற்று, அது என்றும் காற்றாக மட்டுமே இருத்தல் வேண்டும். அதுபோல்தான் கல்வியும். கற்கும் முறையில் அதுவும் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியாயிற்று.
 அப்படி என்ன மாற்றங்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அதுவும் படிக்காமலே. ஆண்டுக்கு பள்ளிக்கு 2 நாள் வந்தால் கூட மாணவர் தேர்ச்சி உறுதி செய்யப்பட்டு விடும். பாடத்தைப் புரிந்து அதனைப் பற்றி மனதில் வரைபடம் வரைந்து பின் ஆசிரியரிடம் கேள்வி கேட்டல். அருமையான முறைதான். ஆனால், இது கல்லூரி மாணவர்களுக்குத்தான் உகந்ததாக இருக்கும். 6-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு "என்றாலும்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் எப்படி பாடத்தை உள்வாங்கிப் புரிந்து படிப்பான் என்பதை அதிகாரிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 புதிய கல்வி முறைப்படி, கரும்பலகையில் இருந்து கணினிக்கு மாறியிருக்கலாம், எழுத்துகள் கொண்ட புத்தகத்தில் இருந்து வண்ணப்படங்கள் கொண்ட பக்கத்துக்கு மாறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு படித்து வெளிவரும் மாணவனின் தரம், செயல்திறன் மிகவும் மோசமாகத்தானே உள்ளது. வகுப்புக்கு 10 பேர் இந்த முறைப்படி சிறந்து விளங்குவதை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் எந்த முறையிலும் தேறி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் எது பெரும்பான்மையோ அதையே நாம் பேச வேண்டும்.
 இன்றைய முறைப்படி, 5-ஆம் வகுப்பு படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் புத்தகத்தில் ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளைப் பிழையில்லாமல் தடுமாற்றமின்றி வாசிக்கும் திறன் முற்றிலும் குறைந்து விட்டது.
 அதேபோல், 1990-இல் 5-ஆம் வகுப்பு படித்த மாணவனுக்கு 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுப்பது எவ்வாறு என்று தெரிந்திருந்தது. ஆனால், இன்று 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 2 இலக்க எண்ணை 1 இலக்க எண்ணால் வகுக்கத் தெரிவது கேள்விக்குறியே!
 இதற்கு ஆசிரியரை நாம் குறை கூறக் கூடாது. புதிய திட்டத்தால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து விட்டது என்று எண்ணி மிகுந்த மனக்குமுறல்களுடன் உள்ளவர்கள் ஆசிரியர்களே!
 இந்தப் புதிய முறை அரசுப் பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்படைவதும் அரசுப் பள்ளி மாணவர்களே. இதனால் இந்தியா வல்லரசு ஆவதோ அல்லது பொருளாதார வளர்ச்சியில் தாழ்வோ ஏற்படும் என்ற கவலை வேண்டாம். ஏனெனில், அந்தப் பணியைச் செய்யத்தான் தனியார் பள்ளிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளனவே.
 தனியார் பள்ளிகளிலோ புதிய கல்வித் திட்டங்களைப் பின்பற்றுவது கிடையாது. கட்டாயத் தேர்ச்சி என்றாலும் பாடங்களைப் படிப்பதும், பள்ளிக்கு வருகையும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்படியென்றால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம்?
 எருதுகளின் கொம்புகளை அலங்கரிக்கும் சலங்கைகள் போல் அல்லாமல் பாதத்தில் கடுமையாக உழைக்கும் லாடமாகத்தானே அவர்கள் மாறுவார்கள். அதுதான் வண்டியின் இயக்கத்துக்கு முக்கியம் என்பது வேறு விஷயம்.
 ஒரு விதையின் வளர்ச்சியை அதன் போக்கில் வளர விட்டோமெனில் அது தாறுமாறாக வளர்ந்து அண்டை வீட்டாரின் வசைச் சொற்களுக்கு ஆளாகி மரத்தையே வெட்டும் நிலை ஏற்படும். மாணவர்களை அவர்கள் போக்கில் படிக்க வேண்டும் என்பதுவே புதிய முறையின் நோக்கம்.
 தீயைத் தொட்டால் சுடும் என்பதை குழந்தை உணர ஒரு நொடி போதும். ஆனால், கண்டிப்பு இல்லாமல், படித்த கல்வியின் தரத்தை உணர குறைந்தது 20 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், காலம் கடந்து விடும். உணர்ந்தும் பயனில்லை. அதனால், விழிப்பதாக இருந்தால் உடனடியாக விழிக்க வேண்டும்.
 படிப்பதற்கு எளிமை; பள்ளிக்கு மாணவர்களின் வருகை; இரண்டும் நேர்விகிதத்தின் அடிப்படையிலே இந்த முறை உருவாக்கப்பட்டது. இப்போது பாடத்தில் எளிமையை அதிகப்படுத்தி மாணவர்களின் வருகையை அதிகப்படுத்தியாயிற்று. இதுவே சிறந்த முறை என்று கூறும் ஆட்சியாளர்களானாலும் சரி, அதற்கு வக்காலத்து வாங்கும் அதிகாரிகளானாலும் சரி, அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கக் கூடாது என்பதில் மட்டும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
 ஒரு பொருளின் உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் தரம் குறைந்து கொண்டுதானே செல்லும். 5 பேருக்குச் சமைக்கும் உணவின் ருசி 10 பேருக்குச் சமைப்பதில் இருக்காது.
 இந்தக் கல்வி முறையில் நிறைய மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து வெளிவந்தாலும் எத்தனை பேருக்கு அதற்கு உண்டான அறிவு இருக்கும்? இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்குக் கவலையும் இல்லை.
 உதாரணத்துக்கு, 1950 லிருந்து இன்று வரை மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் தொழில்நுட்பத்திலும் பல மாறுதல்கள் வந்து விட்டன. ஆனால், 1950 களில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவனுக்குண்டான அறிவு 1980-இல் படித்த மாணவனுக்கு இல்லை; 1980-இல் படித்த மாணவனுடன் ஒப்பிட்டால் 2012-இல் படித்த மாணவன் மிக பலவீனமாகவே காட்சியளிப்பான். எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.
 காற்றைப் போல்தான் கல்வியும். அது அவசியாமனதும் கூட. ஆனால், அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றம் ஏற்பட ஏற்பட விளைவுகளை நாம் கண்டிப்பாகச் சந்தித்தே தீர வேண்டும்.
 ஆசிரியர் ஒருவர் தனது சுய சிந்தனைப்படி சொல்லித் தரக்கூட முடியவில்லை. ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் இடும் உத்தரவைச் செயல்படுத்தும் வெறும் இயந்திரமாக மாணவர்கள் முன் நிற்கும் நிலை உருவாகி விட்டது.
 இவையெல்லாம் அரசுப் பள்ளியில் மட்டுமே என்பதை நாம் மறக்கக் கூடாது. முன்னணி தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர், அரசுப் பள்ளியில் பணியாற்றும்போது அங்கு அளித்த தேர்வு முடிவை அரசுப் பள்ளியில் அளிக்க முடியவில்லையே ஏன்?
 இதன்படி 60 சதவிகித மதிப்பெண் எடுக்கக்கூடிய பெரும்பான்மையான அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சுவையாக இருக்காது. அன்றைய காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், எதிர்காலத்தில், இந்தக் கல்வி முறை அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
 இதே நிலை நீடித்தால் அரசுப் பள்ளி மாணவர்கள், பலவீனமாக்கப்படுவது மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டால் கூட ஆச்சரியமில்லை.
  

 மிக மிக அவசியமான கட்டுரை. மேலும் கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல... ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் தவறாமல் படிக்க வேண்டுகிறேன்... 
By குமார் ப 
6/7/2012 1:59:00 PM
 இன்று நாம் பள்ளியில் படிக்கும்போதே எதிர் காலத்தை பற்றி பெரிய பெரிய கனவுகள்,விழிப்புணர்வு போன்றவை வேண்டும் என்று எதிபார்க்கிறோம். அன்று படிப்பது நம் கடமை, உண்ணுவது, உறங்குவது போல் படிப்பு மனிதர்களுக்கு முக்கியம் என்ற மனப்பான்மையே பலருக்கும் இருந்தது. கல்லூரி போன பின் தான் வேலையை பற்றியும் வாழ்கையை பற்றியும் எண்ணமே வந்தது. அன்றைய ஆசிரியர்கள் வணங்க தக்கவர்கள்.படிப்பை உற்சாகமின்றி, மாணவர்களுக்கு பிடிக்கும் விதத்தில் சொல்லி கொடுக்காததும் குறை தான். கண்டிப்பு வேறு.தண்டிப்பு வேறு.நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் மனதில் வைத்து நேசிக்கிறார்கள்.மருத்துவம், ஆசிரியர் பணி, வழிபாடு தலங்களில், பணத்தின்,பதவியின் ஆதிக்கம் இருந்தால் அவற்றின் சிறப்பு குறைந்து விடும். 
By gopalan 
6/7/2012 8:06:00 AM
 கல்வியாளர்கள் அவசியம் படிக்க படிக்க வேண்டிய ஒருகட்டுரை! இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டது நடக்கும்! 
By சிறகு 
6/7/2012 7:27:00 AM
 அவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்.அவரின் பணிக்காலம் இரு கிராமப்பள்ளிகளில் கழிந்தது.படித்துக்கொண்டே இருப்பார்;பழகிக்கொண்டே இருப்பார்;தொண்டு நிறுவனங்களின் தொடர்பும் உண்டு;கூலி விவசாயிகளின் பிள்ளைகள் என்பதால் அவர்களின் பாடுகளை அறிந்திருந்தார்;கல்வியால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை உணர்த்தினார்;அழகாக உடுத்துவார்;காலம் தவறாமைக்கு முக்கியத்துவம் தந்தார்;கண்டித்தார்,கருணையுடன் உறவாடினார்;அண்மைக்கால மாற்றங்களை முற்றிலும் நிராகரித்தார்;அவர் நம்பும் தெய்வமும் வகுப்பறையில் இருப்பதாக எண்ணினார்;கதைகள்,தியானம்,யோகா,ஆசனம்,முத்திரைகள்,அனுதின நிகழ்வுகள்,சினிமா..அறிமுகம் செய்தார்;சாதி மதங்களுக்கு அப்பால் நின்று மனிதம் தேடினார்...ஆக,மனோபாவ மாற்றங்கள் ஆசிரியர்களிடம்..ஆசிரியர்களிடம்..ஆசிரியர்களிடம்....மட்டும் வேண்டும்,போதும்,அவசியம்..! 
By பி.ஸ்தனிஸ்லாஸ் 
6/7/2012 6:40:00 A

ஜூன் 2012 மாதத்திற்கான தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார குறுவள மையப் பயிற்சி.


ஜூன் 2012 மாதத்திற்கான தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார குறுவள மையப் பயிற்சி.

மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ 5 / பயிற்சி / அ க இ / 12 நாள்.  6 .12
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 30.06.2012
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி : 23.06.2012
தலைப்பு : CCE & SABL.

வியாழன், 7 ஜூன், 2012

2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிநிரவலுக்கு பின் நடைபெறும்


2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பணிநிரவலுக்கு பின் நடைபெறும்

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எனவே இதுகுறித்து கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் கூறியது கலந்தாய்வு முடிந்த பிறகு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 : 30 ஆசிரியர் மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்த உள்ளோம். அதில் குறைந்தபட்சம் 2 ஆசிரியர்களும் 71 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விதியை மாற்றி இனி
61 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள்       என  1 : 30 விகிதாச்சாரப்படி பணிநிரவல் முடித்தப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதே நிலை தான் பள்ளிக் கல்வித்துறையிலும் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே 2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பணிநிரவலுக்கு பின் நடைபெறும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி       1 : 30 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் தான் அதற்கான SSA நிதி மத்திய அரசிடம் இருந்து   விடுவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.