சனி, 7 ஜூலை, 2018

சிறப்புக் கட்டுரை:மின்னம்பலம்
கல்வித் தரத்தை உயர்த்தும் ஆசிரியர்கள்!
அ.விக்னேஷ்
தமிழகத்தில் கல்வியறிவின் வளர்ச்சி குறித்து தொடர் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம். முந்தைய கட்டுரைகளில் கல்வியறிவு விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், கல்வியறிவு விகிதத்தில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சி, கல்வியறிவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சி, கல்வியறிவு விகிதத்தில் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சி, மாவட்டங்களின் கல்வியறிவு விகித வளர்ச்சியில் உள்ள பாலின இடைவெளி, தொடக்க நிலைக் கல்வி, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், நிகர மாணவர் சேர்க்கை விகிதம், ஆரம்ப நிலைக் கல்வியிலிருந்து மாணவர்கள் வெளியேறும் விகிதம், கல்வி நிறைவு விகிதம், பள்ளி செல்லா மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பார்த்தோம். இக்கட்டுரையில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி குறித்த மற்ற புள்ளிவிவரங்களைக் காண்போம்.
மாணவர் - ஆசிரியர் விகிதம்:
ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை, அக்கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதே மாணவர் - ஆசிரியர் விகிதம் ஆகும். கல்வித் தரத்தை அளவிடுவதற்கான ஓர் அளவுகோலாக மாணவர் - ஆசிரியர் விகிதம் திகழ்கிறது. 2005-06ஆம் ஆண்டுக்கும் 2011-12ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் மாணவர் - ஆசிரியர் விகிதம் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டாலும்கூட, சில மாவட்டங்கள் மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் குறுகிய வளர்ச்சியையே எட்டியுள்ளன. அதிகபட்சமாகப் புதுக்கோட்டை மாவட்டம் 14 விழுக்காடு வளர்ச்சியையும், திருவள்ளூர் மாவட்டம் 12 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டியுள்ளன. குறைந்தபட்ச வளர்ச்சியாக மதுரை மாவட்டம் 2 விழுக்காடு வளர்ச்சியையும், சென்னை 2 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டியுள்ளன.
ஓராசிரியர் பள்ளிகள்:
ஒரே ஓர் ஆசிரியரைக் கொண்ட தொடக்க நிலைப் பள்ளிகளின் ஒட்டுமொத்த விகிதம் 2005-06ஆம் ஆண்டுக்கும் 2011-12ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சரிந்துள்ளது. அதிகப்படியான முன்னேற்றத்தை ராமநாதபுரம் மாவட்டமும், புதுக்கோட்டை மாவட்டமும் எட்டியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஓர் ஆசிரியரைக் கொண்ட தொடக்க நிலைப் பள்ளிகளின் விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 17.6 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 4.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2005-06ஆம் ஆண்டில் 17.3 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 6.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் அதிகளவிலான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது உறுதியாகிறது.
நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓர் ஆசிரியரைக் கொண்டு இயங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 4.6 விழுக்காடு உயர்ந்துள்ளது.
பெண் ஆசிரியர்களின் விகிதம்:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெண் ஆசிரியர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. 2005-06ஆம் ஆண்டில் தொடக்க நிலைப் பள்ளிகளில் அதிக விகிதத்திலான பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாவட்டங்களில் சென்னை (95.7 விழுக்காடு) முதலிடத்தில் இருந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் மதுரை (86.5 விழுக்காடு), திருச்சிராப்பள்ளி (78.8 விழுக்காடு) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தொடக்க நிலைப் பள்ளிகளில் மிகக் குறைந்த விகிதத்திலான பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாவட்டங்களில் விழுப்புரம் (62.2 விழுக்காடு), பெரம்பலூர் (64.9 விழுக்காடு), காஞ்சிபுரம் (77.5 விழுக்காடு), புதுக்கோட்டை (67 விழுக்காடு) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
ஆசிரியர்களின் கல்வித் தகுதி:
2002-03ஆம் ஆண்டில் தொடக்க நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களில் 65.18 விழுக்காட்டினர் பட்டதாரிகளாகவும், 15.57 விழுக்காட்டினர் மேனிலைக் கல்வித் தகுதியோடும், 11.89 விழுக்காட்டினர் உயர் மேனிலைக் கல்வித் தகுதியோடும் இருந்துள்ளனர். 2011-12 நிலவரப்படி, மேனிலைக் கல்வித் தகுதியுடனான ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உயர் மேனிலைக் கல்வி பெற்றவர்கள், பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேனிலைக் கல்விக்கும் குறைவான தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 2002-03ஆம் ஆண்டில் 1.26 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 1.22 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மேனிலைக் கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 2002-03ஆம் ஆண்டில் 15.57 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 13.17 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உயர் மேனிலைக் கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 2002-03ஆம் ஆண்டில் 11.89 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 12.01 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பட்டதாரிகளின் எண்ணிக்கை 2002-03ஆம் ஆண்டில் 65.18 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 67.22 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முதுநிலைப் பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 2002-03ஆம் ஆண்டில் 5.04 விழுக்காட்டிலிருந்து 2011-12ஆம் ஆண்டில் 6.38 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
ஆசிரியப் பணியில் சமூகப் பிரிவுகளின் பங்களிப்பு:
2011-12 நிலவரப்படி, தொடக்க நிலைக் கல்வியில் பணியாற்றிய ஆசிரியர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் (77.45 விழுக்காடு) அதிகளவிலான பங்கினை வகித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஆண் ஆசிரியர்கள் (75.11 விழுக்காடு) அதிகளவிலான பங்கினை வகித்துள்ளனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் (0.92 விழுக்காடு) மிகக் குறைவான பங்கினை வகித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பழங்குடி வகுப்பினைச் சேர்ந்த ஆண் ஆசிரியர்கள் (1.33 விழுக்காடு) மிகக் குறைவான பங்கினை வகித்துள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் ஆசிரியர்களின் பங்கு 17.75 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண் ஆசிரியர்களின் பங்கு 15.03 விழுக்காடாகவும் இருந்துள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்த பெண் ஆசிரியர்களின் பங்கு 6.61 விழுக்காடாகவும், பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண் ஆசிரியர்களின் பங்கு 5.81 விழுக்காடாகவும் இருந்துள்ளது.
தமிழகத்தின் கல்வியறிவு வளர்ச்சி குறித்த மற்ற அம்சங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.
மின்னஞ்சல் முகவரி: feedback@minnambalam.comhttps://www.facebook.com/photo.php?fbid=1741711242616527&set=a.139495922838075.26149.100003330057623&type=3