ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாட்டின் அளவு எல்லையை மீறிச் செல்வ தாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
2011ஆம் ஆண்டில் சென்னையில் பட்டாசு ஒலி மாசுபாடு கண்காணிக்கப்பட்ட அயனாவரம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அதே ஆண்டில் காற்றில் கலந்திருந்த சஸ்பெண்டட் பார்ட்டிகுலேட் மேட்டர் (காற்றில் கலந்திருக்கும் துகள்) கியூபிக் மீட்டருக்கு 498 மைக்ரோகிராம் அளவு இருந்திருக்கிறது.
125 டெசிபலுக்கு மேலாக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சத்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல். இவை அனைத்துமே அந்தக் கட்டுப்பாட்டை மீறுகின்றன.
இந்த அளவு சத்தத்தைக் கேட்டால் காது செவிடாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
காற்று மாசுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருப்பதுதான். குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் அவர்களிடம் சுவாசக் கோளாறை ஏற்படுத்துவதில் பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.