ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

இரவு...தீப் பந்தங்கள்... கல்வி


இரவு...தீப் பந்தங்கள்... கல்வி

அந்தப் பல்கலை கழகத்தில் என்ன நடத்தினார்கள் என்பதில் ஏதேனும் விவாதம் இருக்குமானால் அதைக் கொஞ்சம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேத் தோன்றுகிறது.

அந்தப் பல்கலைக் கழகம் குறித்த எந்தத் தகவலும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நம்மை அழைத்துப் போகின்றன.

பத்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கிப் படித்திருக்கிறார்கள்.



இத்தனை விளம்பரங்கள், இத்தனை விதமான போக்கு வரத்து வசதிகள், இத்தனை கேம்பஸ் வாய்ப்புகள் எல்லாம் கடந்து வியக்குமளவு ஜனத்தொகை
எல்லாம் இருந்தே இவ்வளவு மாணவர்களை கொண்டு வருவது சாத்தியமே இல்லாத போது அது சாத்தியப் பட்டிருக்கிறது.

படிக்கிறவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் இன்னபிற கல்விச் செலவுகள் எல்லாம் இலவசம்.

இலவசம் என்பதை விட இது அரசின் கடமை என்பதை அந்த மன்னன் உணர்ந்திருக்கிறான்.

இரவிலும் வகுப்புகளும் விவாதங்களும் தொடர்ந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே இயலவில்லை,

தீப் பந்தங்களின் ஒளியில் இவை சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒரு மன்னனின் சாம்ராஜியத்தில் எத்தனை கிராமங்கள் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானம் முழுவதையும் அந்த மன்னன் கல்விக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறான்.

பாஹியான் சொன்னதாகக் கிடைக்கும் குறிப்புகள் நம்மை திக்கு முக்காட வைக்கின்றன,

 பத்தாயிரம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து நெறிப் படுத்தியிருக்கிறார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அங்கு பணியாற்றியிருக்கிறார்கள்.

கல்விதான் மண்ணிற்கு வெளிச்சத்தையும் சாரத்தையும் தரும் என்று புரிந்திருக்கிறது அந்த மன்னர்களுக்கு.

“ அறிவை அள்ளித் தரும் இடம்” என்று பொருள் படும் படி “நாளந்தா” என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.



வருவாயில் பெரும்பகுதியை கல்விக்கு செலவு செய்திருக்கிறார்கள் முடி சுமந்த மன்னர்கள்.

வருவாயில் பத்து சத விகிதம் கூட மக்களாட்சியில் கல்விக்கு இல்லை.

பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் இரண்டாயிரம் ஆசிரியர்களும், மூவாயிரம் ஆசிரியரில்லாத ஊழியர்களுமென்று ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் பணி புரிந்துள்ளனர்.

முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் மிக நீண்ட கனவாகவே உள்ளது.

நாளந்தாவின் பெருமையும் கல்வியின் மகத்துவமும் நிச்சயமாய் பிரதமருக்கும் எல்லா முதல்வர்களுக்கும் தெரிந்தேதான் உள்ளது.



எனில் ,

இவர்கள் கல்வியை இப்படி வணிகப் படுத்துகிறார்களே. ஏன்?

உழைக்கும் ஜனத்திரளும், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளும் கல்வி பெற்றுவிட்டால் தாங்கள் சொகுசாக இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு என்ன? 
by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக