செவ்வாய், 11 டிசம்பர், 2012

ரோல்மாடலாக இருந்து ஆசிரியர்கள் மாணவர்களை கவர வேண்டும்: புதிய ஆசிரியர்களுக்கு பெண் அதிகாரி விளக்கம்

டேய், டப்பாஸ் வேணாண்டா... முதல் பீரியடு பிளேடுடா தூக்கம் வரும்... கட் அடிச்சுருவோமா...? என்று வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள். அவரு அடி பின்னிடுவாரு... பாடம் புரியாட்டும் பரவாயில்லை. தலையை ஆட்டி கிட்டாவது வகுப்பில் உட்காரு வோம்டா... என்று பயந்தே வகுப்பறையில் நேரத்தை போக்கும் மாணவர்கள்... படிக்கும் போது பாடம் புரிகிறதோ? இல்லையோ? ஒவ்வொரு ஆசிரியர்களின் நடை, உடை, பாவனைகளை வைத்து ஒவ்வொரு பட்டப் பெயர்கள் சூட்டுவதில் மாணவர்கள் கில்லாடிகள்.

சில சமயங்களில் தங்கள் பட்டப் பெயர்களை கேட்டு ஆசிரியர்களே அதிர்ந்து போவார்கள். இதுக, படிக்கவா வருது உருப்படாத ஜென்மங்கள்! என்று வெறுப்பில் திட்டி தீர்ப்பார்கள்.

கோடிகளுக்கு அதிபதியானாலும் தெருக்கோடியில் வயது முதிர்ந்து தள்ளாடி நடந்து வரும் ஆசிரியரை கண்டால் ஓடி சென்று சார், வணக்கம். நல்லா இருக்கீங்களா? என்று கேட்கும் முன்னாள் மாணவனை பார்த்ததும் அந்த ஆசிரியரின் பொக்கை வாய் சிரிப்பில் ஆயிரம் மத்தாப்புகளை பார்க்கலாமே. ஆயிரம் ஆஸ்கார் விருதை விட உயர்ந்த விருதாக கருதி அந்த ஆசிரியரின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்குமே! இப்படிப்பட்ட காட்சிகள் இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகிறதே ஏன்?

ஆசிரியர்கள் மாணவர்கள் மனதிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் மனதிலும் இடம் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம்? மாணவர்களை ஆசிரியர்கள் கவருவது எப்படி? சுவாராஸ்யமாக விளக்கினார் பெரியமேடு உதவி கல்வி அதிகாரி சாந்தி.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 13-ந் தேதி பணி நியமன ஆணைகள் வழங்குகிறார். அந்த ஆசிரியர்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் இன்று நடந்தது. 

கலந்தாய்வுக்கு வந்த புதிய ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து அதிகாரி சாந்தி நடத்திய கிளாசை சுவாரஸ்யமாக கேட்டு கொண்டிருந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதியதில் சில ஆயிரம் பேர்தான் வெற்றி பெற்றார்கள். எனவே இவர்கள் திறமைசாலிகள் என்பதற்கு இதைவிட அத்தாட்சி தேவையில்லை. ஆனால் படிப்பில் மட்டும் திறமை இருந்தால் போதாது! சகலகலா வித்தகர்களாக திகழ வேண்டும். அப்படியானால்தான் மாறி வரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களை தன் வசப்படுத்த முடியும் என்றார் சாந்தி. 

வேலை கிடைச்சாச்சு. இனி மாதம் தோறும் அரசாங்க சம்பளம்... என்ற எண்ணத்துக்கு அப்பாற்பட்டு புதிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்படி பணி செய்ய வேண்டும் என்று விளக்கினார். நூறு சதவீத சந்தோசத்துடன் வேலையில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு வீடு வாசல்படி மாதிரி ஒவ்வொருவருக்கும் வீட்டு பிரச்சினைகள் ஏதாவது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சினைகளை பள்ளிக்கு வரும்போது வெளியே விட்டுவிட வேண்டும்.

பள்ளிக்குள் செல்லும் போது சிரித்த முகத்தோடு, அழகாக ஆடை அணிந்து செல்ல வேண்டும். உங்கள் நடை உடை, பாவனைகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும். நீங்கள்தான் அவர்களுக்கு ரோல் மாடல். பள்ளிக்கு சென்றதும் செல்போனை தூங்க வைத்து விடுங்கள். மாணவர்கள் தூங்காமல் பாடம் படிக்கும் படி உற்சாகமாக பாடம் நடத்த வேண்டும். 

வகுப்பறைக்குள் சென்றதும் அன்றைய நாட்டு நடப்புகளை பற்றி சிறிது நேரம் மாணவர்களோடு கலந்துரையாடுங்கள். அதன் பிறகு பாடம் நடத்துங்கள். வெறும் புத்தகம் மட்டும் மாணவர்களை உருவாக்காது. நல்ல கருத்துக்கள், பழக்க வழக்கங்களை சொல்லி கொடுங்கள். ஒவ்வொரு மாணவர்களையும் துல்லியமாக கவனித்து அவர்களது நிறை, குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துங்கள். உங்களோடு அவர்கள் ஒன்றி விடுவார்கள்.

நான் பள்ளியில் ஸ்கேலால் கை விரலில் வாங்கிய அடியால் தமிழ் எழுத்துக்களை முத்து முத்தாக எழுத கற்று கொண்டேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். அனுபவமே பாடம். அதை வைத்து ஒவ்வொரு மாணவரையும் அற்புதமானவர்களாக உருவாக்குங்கள் என்றார். அதிகாரி சாந்தியின் அனுபவம் மிகுந்த ஆழமான, யதார்த்தமான கருத்துகள் கேட்டவர்கள் அத்தனை பேரையும் நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும்.

நடைமுறையில் இதை கடைபிடித்தால்... வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை... போதையில் வகுப்புக்கு வந்த மாணவன்... பள்ளிக்கு செல்லாமல் திரையரங்குகள், மால்களுக்கு சென்று தடம்மாறும் மாணவர்கள் என்ற வேதனையான நிகழ்வுகள் அரங்கேறாது என்று உறுதியாக சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக