புதன், 12 டிசம்பர், 2012

" மாதவிடாய் " ஆவணப்படம்


மாதவிடாய் இந்த வார்த்தையை உபயோகிப்பதையே கேவலமாக நினைத்த சமூகம் நம் சமூகம். இதற்கு அந்த 3 நாட்கள், வீட்டுக்கு தூரம் என்று பல கேவலமான பெயர்கள் இட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு செல்வந்தாரக பிறந்தாலும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள் இதை மறுக்க இயலாது.

கால ஓட்டத்தில் இன்று இந்த கொடுமைகள் மறந்து இன்று நாப்கின் அறிமுகப்படுத்ப்பட்டு ஒரளவிற்குத்தான் மக்கள் இதை பின்பற்றுகின்றனர். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் அந்த 3 நாட்களுக்கு மட்டும் என நாப்கின் விளம்பரம் வரும் போது என்ன ஏதுவென்று தெரியாமல் விழிபிதுங்கியவர்கள் தான் ஏராளம்.

பெண்களை விட ஆண்களுக்கத்தான் இதில் விழிப்புணர்வு தேவை என்று மாதவிடாய் என்று பெயரிட்டு ஆண்களுக்காக ஓர் ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார்கள் முகநூலில் நான் அண்ணன் என்று அன்போடு அழைக்கும் இளங்கோவனும் அவரின் மனைவி கீதாவும்.

இந்த படத்தின் இயக்குநர் கீதா அவர்கள் மாதவிடாய் என்று படத்திற்கு  பெயரிட்டதற்கே அவரை பாரட்ட வேண்டும்...

இந்த ஆவணப்படம் ஆண்களின் விழிப்புணர்வுக்குத்தான்.. இந்த ஆவணப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

இந்த படத்தை பற்றி பிரபலங்களின் கருத்துக்கள் முகநூலில் இளங்கோவன் மற்றும் நண்பர்கள் பதிந்தது...


தாய்வழிச்சமூகத்தின் விழுதுகள் பாய்ந்திருக்கும் சில இனக்குழுக்களுக்கிடையே இன்றும் மாதவிடாய் மதிப்புமிக்கதாகவும், வளமைக்கு அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

அஸ்ஸாமில் உள்ள காமாக்கியா என்னும் காளி மாதா கோவிலில் அம்மனின் மாதவிடாய் ரத்தமே பிரசாதமாக கொடுக்கப்படுவதாக ஐதீகம் இருக்கிறது.

தாந்திரிக முறை வழிபாட்டிலும் கூட யோனியும், மாதவிடாயும் வழிபாட்டுக்குரிய சங்கதிகளாகவே கருதப்படுகின்றன.
கடவுளோ, மத நூலோ மாதவிடாயை வெறுக்கும் படியோ, அதன் காரணமாய் பெண்களை ஒதுக்கிவைக்கும் படியோ சொன்னதில்லை.

பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமுதாயமே மாதவிடாய் பற்றிப் பொய்யும், இழிவுமான கற்பிதங்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.
துணியோ, நாப்கினோ...ஒழித்து வைத்துப்பயன்படுத்தும் நிர்பந்தம் எதற்கு பெண்ணுக்கு?

ஆண் ரேசர் வாங்கிச்சவரம் செய்யக் கூச்சப்படுகிறானா என்ன?
மாதவிடாய் பெண்களை தனிமைப் படுத்திக் கொடுமை செய்யும் "முட்டு வீடுகள்" இன்றைக்கும் நம் கிராமங்களில் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
மாதவிடாய் சமயத்திலும் மோனோபாஸ் சமயத்திலும் பெண்களுக்கு உளவியல்ரீதியான சிரமங்கள் நேரும் . அதன் விளைவாக காரணமே இல்லாமல் கூட எரிச்சல்படுவதும் சில பெண்களின் இயல்பாய் இருக்கும் என்ற மருத்துவ உண்மை எத்தனை ஆண்களுக்குத் தெரியும்?
"அரசு அலுவலகங்களிலுள்ள கழிப்பறைகளில் பெண்களின் மாதவிடாய் தேவைக்கான வசதிகள் என்ன ஏற்படுத்தித்தரப்படுகின்றன?" -என்ற கேள்வியை , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய அரசின் கட்டிடங்கள் கட்டும் அரசு நிறுவனமான சிபிடபிள்யூடி யிடம் கேட்ட போது, அப்படி எந்த வசதியும் செய்யப்படுவதில்லை என்றே பதிலாகக் கிடைத்துள்ளது.
 வீட்டிலிருக்கும்-அலுவலகத்திலிரருக்கும் பெண்களைக் காட்டிலும் பொதுவெளியில் களப்பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் பெரும் சவாலாக இருக்கிறது.

கழிப்பறை வசதிகள் இல்லாத சூழலில் எல்லாம் பணியில் கவனம் குறைந்திட அவளுடைய பணித்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுவிடுகிறது.
 மாதவிடாய் ரத்தம் அசிங்கமானதோ, அருவெறுப்பானதோ அல்ல.

தாய்ப் பாலைப் போன்று பெண்ணின் உடம்பில் ஊறும் ரத்தத்தில் உருவாகும் இன்னொரு இயற்கையான சங்கதி.

சமீபத்திய ஸ்டெம் செல் ஆய்வுகள் இந்த ரத்தத்தின் மூலம் குணப்படுத்த முடியா மனித நோய்கள் பலவற்றைக் குணப்படுத்த முடிவதாய் கண்டுபிடித்துள்ளன.

எனவே மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் உருவாகியுள்ளன.
"ஒரு பொது இடத்திலோ....மேடையிலோ....யாராவது என்னைக் கவனித்து " அம்மா....உங்க ஆடையில கறை...." என்று சொல்லத் தொடங்கினால் ஏதோ கொலைப்பாவம் செய்த மாதிரி ஒரு குற்றவுணர்வு......

எங்கிருந்து வருகிறது இந்தக் குற்றவுணர்வு....?

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கே இப்படியொரு குற்றவுணர்வு என்றால் சராசரிப் பெண்களின் நிலை என்ன?"

உங்களின் அன்பு மகளுக்காக நகையும் விலை உயர்ந்த ஆடைகளும் வாங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்...

ஆனால் அந்தக்குழந்தை சரியான கழிப்பறை வசதியில்லாத பள்ளியில் நாப்கின் மாற்ற முடியாமல் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் சொல்லொண்ணா கொடுமையை அநுபவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?‘
சட்டங்களை இயற்றும் சட்ட மன்றத்திலும் சரி. அவற்றை நடைமுறைப்படுத்தும் அரசு அலுவலகங்களிலும் சரி. மாதவிடாய் காலத்துப் பெண்களின் தேவையை மனதில் கொண்டு கழிப்பறையில் எந்த வித வசதியும் செய்யப்படவில்லை. அப்படியொரு சிந்தனையும் இல்லை என்கிறார்.
- மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி.
 பயன்படுத்திய நாப்கினை டாய்லெட்டுக்குள் போடுவதால் டாய்லெட் அடைத்துக்கொள்கிறதுதான்....

ஆனால் பெண்கள் நாப்கினை அப்புறப்படுத்த வேறு வழி என்ன கொடுத்திருக்கிறோம்?
 இந்தியாவில் சுமார் 80% பெண்கள் மாதவிடாய் சமயத்தில் துணியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாய் அடித்தட்டுப் பெண்கள்.

அதில் தவறொன்றும் இல்லைதான்.

என்றாலும் துணியை ஆண்களுக்குத் தெரியாத வண்ணம் சுத்தப்படுத்தி உலர்த்திப் பயன்படுத்தவேண்டுமே என்ற சமூக நிர்பந்தம் காரணமாய் சரிவர சுத்தப்படுத்தாமலும், சரிவர உலர்த்தாமலும் பயன்படுத்துவதால் அதுவே பெரும்பாலான நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடுகின்றது.
"துப்புரவுப்பணி என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கான பணி"- என்ற சமுதாயத்தின் ஆதிக்க எண்ணமும் கூட கழிப்பறையில் எந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் நவீன முறையைக் கொண்டுவருவதற்கு ஒரு வகையில் தடையாக நிற்கிறது.

அதனாலேயே பெண்களின் அத்தியாவசியத் தேவையான கழிப்பறை சீர்திருத்தமும் தடைப் பட்டு நிற்கிறது.
  "ஜாதிக் கலவரத்தை கட்டுப்படுத்தி பந்தோபஸ்த்து டியூட்டில இருக்கிற பெண் காவலர் படுற சிரமம் மத்த வேலைகளுக்குப் போகும் பெண்களின் சிரமத்தை விட கொடுமையானது.

ரெண்டு ஜாதியில் எந்த ஜாதி வீட்டு டாய்லெட்டை பயன்படுத்தினாலும் அந்த ஜாதிக்குத்தான் காவல்துறை சப்போர்ட் பண்ணுறாங்கன்னு அடுத்த ஜாதிக்காரங்க கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க"
- திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு)
 
 "கழிப்பறை/ தண்ணீர் வசதி இல்லாததால் நாப்கின் மாத்த முடியாது. நாப்கின் மாத்த முடியாததால் சிறு நீர் கழிக்க முடியாது. சிறு நீர் கழிக்க முடியாததால் பகல் முழுக்க தண்ணீர் குடிக்க மாட்டோம்....தண்ணீர் குடிக்க முடியாது என்பதால் நாள் முழுக்க சாப்பிடவும் மாட்டோம்."

உங்கள் குழந்தைகள் மதியம் சாப்பிடாமல் டிபன்பாக்ஸை அப்படியே வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் போது, அதற்குள் இப்படியும் ஒரு காரணம் இருக்குமென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரு ஓரங்களில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வறுமை காரணமாய் நாப்கினோ- துணியோ பயன்படுத்தும் வசதி இருக்காது.

சுத்தப்படுத்திக் கொள்ளவும் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதன் காரணமாய் தொற்றும், சமயங்களில் கர்ப்பைப்பை புற்று நோய் நேரவும் இந்த சுத்தமின்மை காரணமாகிவிடுகிறது.
மகப்பேறு, குழந்தை வளர்ப்பு என்ற வரிசையில் மாதவிடாய் என்பதையும் "பொம்பளைங்க சமாச்சாரம்" என்று விலகியும், விலக்கியும் வைப்பது ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கிறது. 

ஆனால் இது ஆண்மைக்கான அழகல்ல.

மேற் சொன்ன அனைத்து காரியத்திலும் ஆணுக்கும் பொறுப்பு உண்டு.

இதனால்த்தான் "மாதவிடாய்"- ஆவணப்படமும் பெண்களால் உருவாக்கப்பட்ட ஆண்களுக்கான படமாய் அமைந்தது.

எப்படியோ, இதற்கான அழைப்பிதழில் அந்த முக்கிய சங்கதி விட்டுப் போனதை இப்போதுதான் கவனித்தோம்.

எனவே " ஆண்களுக்கான பெண்களின் படம்", " A film by Women for Men" என்ற திருத்தத்தை உள்ளடக்கி அழைப்பிதழை மீண்டும் முன்வைக்கிறார் இளங்கோவன்..
இந்த ஆவணப்படம் வெற்றியடைந்து பல விருதுகளை பெறும் அதை விட இதைப் பார்த்து விழிப்புணர்வால் இந்த இயற்கை குருதியில் இருந்து சுகாதரமாக தன் மனைவியை கணவன்மார்கள் பாதுகாத்துக்கொண்டால்
அது தான் மிகப்பெரிய விருது...

1 கருத்து:

  1. இன்றைய நாட்களில் மட்டும் அல்ல என்றும் இவை மிகைப்படுத்தவே படுகிறது பல குடும்பங்களில்
    இந்நாட்களில் உதிரப்போக்கினால் உடல்சோர்வு அதிகம் இருக்கும் இந்நாட்களில் ஓய்வு எடுத்தால் நல்லது என்ற
    முன்னோர்களின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே இந்த ஒதுக்கி வைத்தல்..

    பதிலளிநீக்கு