வெள்ளி, 8 ஜூன், 2012

அடிப்படையில் மாற்றம் கூடாது


எக்காலத்திலும் மனிதனுக்கு வலிமை அளிக்கக்கூடிய கருவி கல்வி. கல்வி கற்பிக்கப்படும் முறையில் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
 மாற்றங்கள்தான் மாறாதது என்றாலும், பொருளின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால் அது வேண்டத்தகாத விளைவுகளைத்தானே உருவாக்கும். சுவாசிக்கும் காற்றில் மாற்றம் ஏற்படின் அது அனைத்து உயிரினங்களுக்குமே தீங்கை விளைவிக்கும். காற்று, அது என்றும் காற்றாக மட்டுமே இருத்தல் வேண்டும். அதுபோல்தான் கல்வியும். கற்கும் முறையில் அதுவும் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியாயிற்று.
 அப்படி என்ன மாற்றங்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அதுவும் படிக்காமலே. ஆண்டுக்கு பள்ளிக்கு 2 நாள் வந்தால் கூட மாணவர் தேர்ச்சி உறுதி செய்யப்பட்டு விடும். பாடத்தைப் புரிந்து அதனைப் பற்றி மனதில் வரைபடம் வரைந்து பின் ஆசிரியரிடம் கேள்வி கேட்டல். அருமையான முறைதான். ஆனால், இது கல்லூரி மாணவர்களுக்குத்தான் உகந்ததாக இருக்கும். 6-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு "என்றாலும்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் எப்படி பாடத்தை உள்வாங்கிப் புரிந்து படிப்பான் என்பதை அதிகாரிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 புதிய கல்வி முறைப்படி, கரும்பலகையில் இருந்து கணினிக்கு மாறியிருக்கலாம், எழுத்துகள் கொண்ட புத்தகத்தில் இருந்து வண்ணப்படங்கள் கொண்ட பக்கத்துக்கு மாறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு படித்து வெளிவரும் மாணவனின் தரம், செயல்திறன் மிகவும் மோசமாகத்தானே உள்ளது. வகுப்புக்கு 10 பேர் இந்த முறைப்படி சிறந்து விளங்குவதை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் எந்த முறையிலும் தேறி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் எது பெரும்பான்மையோ அதையே நாம் பேச வேண்டும்.
 இன்றைய முறைப்படி, 5-ஆம் வகுப்பு படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்குப் புத்தகத்தில் ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளைப் பிழையில்லாமல் தடுமாற்றமின்றி வாசிக்கும் திறன் முற்றிலும் குறைந்து விட்டது.
 அதேபோல், 1990-இல் 5-ஆம் வகுப்பு படித்த மாணவனுக்கு 4 இலக்க எண்ணை 2 இலக்க எண்ணால் வகுப்பது எவ்வாறு என்று தெரிந்திருந்தது. ஆனால், இன்று 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 2 இலக்க எண்ணை 1 இலக்க எண்ணால் வகுக்கத் தெரிவது கேள்விக்குறியே!
 இதற்கு ஆசிரியரை நாம் குறை கூறக் கூடாது. புதிய திட்டத்தால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து விட்டது என்று எண்ணி மிகுந்த மனக்குமுறல்களுடன் உள்ளவர்கள் ஆசிரியர்களே!
 இந்தப் புதிய முறை அரசுப் பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்படைவதும் அரசுப் பள்ளி மாணவர்களே. இதனால் இந்தியா வல்லரசு ஆவதோ அல்லது பொருளாதார வளர்ச்சியில் தாழ்வோ ஏற்படும் என்ற கவலை வேண்டாம். ஏனெனில், அந்தப் பணியைச் செய்யத்தான் தனியார் பள்ளிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளனவே.
 தனியார் பள்ளிகளிலோ புதிய கல்வித் திட்டங்களைப் பின்பற்றுவது கிடையாது. கட்டாயத் தேர்ச்சி என்றாலும் பாடங்களைப் படிப்பதும், பள்ளிக்கு வருகையும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்படியென்றால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம்?
 எருதுகளின் கொம்புகளை அலங்கரிக்கும் சலங்கைகள் போல் அல்லாமல் பாதத்தில் கடுமையாக உழைக்கும் லாடமாகத்தானே அவர்கள் மாறுவார்கள். அதுதான் வண்டியின் இயக்கத்துக்கு முக்கியம் என்பது வேறு விஷயம்.
 ஒரு விதையின் வளர்ச்சியை அதன் போக்கில் வளர விட்டோமெனில் அது தாறுமாறாக வளர்ந்து அண்டை வீட்டாரின் வசைச் சொற்களுக்கு ஆளாகி மரத்தையே வெட்டும் நிலை ஏற்படும். மாணவர்களை அவர்கள் போக்கில் படிக்க வேண்டும் என்பதுவே புதிய முறையின் நோக்கம்.
 தீயைத் தொட்டால் சுடும் என்பதை குழந்தை உணர ஒரு நொடி போதும். ஆனால், கண்டிப்பு இல்லாமல், படித்த கல்வியின் தரத்தை உணர குறைந்தது 20 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், காலம் கடந்து விடும். உணர்ந்தும் பயனில்லை. அதனால், விழிப்பதாக இருந்தால் உடனடியாக விழிக்க வேண்டும்.
 படிப்பதற்கு எளிமை; பள்ளிக்கு மாணவர்களின் வருகை; இரண்டும் நேர்விகிதத்தின் அடிப்படையிலே இந்த முறை உருவாக்கப்பட்டது. இப்போது பாடத்தில் எளிமையை அதிகப்படுத்தி மாணவர்களின் வருகையை அதிகப்படுத்தியாயிற்று. இதுவே சிறந்த முறை என்று கூறும் ஆட்சியாளர்களானாலும் சரி, அதற்கு வக்காலத்து வாங்கும் அதிகாரிகளானாலும் சரி, அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கக் கூடாது என்பதில் மட்டும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
 ஒரு பொருளின் உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் தரம் குறைந்து கொண்டுதானே செல்லும். 5 பேருக்குச் சமைக்கும் உணவின் ருசி 10 பேருக்குச் சமைப்பதில் இருக்காது.
 இந்தக் கல்வி முறையில் நிறைய மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து வெளிவந்தாலும் எத்தனை பேருக்கு அதற்கு உண்டான அறிவு இருக்கும்? இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்குக் கவலையும் இல்லை.
 உதாரணத்துக்கு, 1950 லிருந்து இன்று வரை மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் தொழில்நுட்பத்திலும் பல மாறுதல்கள் வந்து விட்டன. ஆனால், 1950 களில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவனுக்குண்டான அறிவு 1980-இல் படித்த மாணவனுக்கு இல்லை; 1980-இல் படித்த மாணவனுடன் ஒப்பிட்டால் 2012-இல் படித்த மாணவன் மிக பலவீனமாகவே காட்சியளிப்பான். எதிர்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.
 காற்றைப் போல்தான் கல்வியும். அது அவசியாமனதும் கூட. ஆனால், அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றம் ஏற்பட ஏற்பட விளைவுகளை நாம் கண்டிப்பாகச் சந்தித்தே தீர வேண்டும்.
 ஆசிரியர் ஒருவர் தனது சுய சிந்தனைப்படி சொல்லித் தரக்கூட முடியவில்லை. ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் இடும் உத்தரவைச் செயல்படுத்தும் வெறும் இயந்திரமாக மாணவர்கள் முன் நிற்கும் நிலை உருவாகி விட்டது.
 இவையெல்லாம் அரசுப் பள்ளியில் மட்டுமே என்பதை நாம் மறக்கக் கூடாது. முன்னணி தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர், அரசுப் பள்ளியில் பணியாற்றும்போது அங்கு அளித்த தேர்வு முடிவை அரசுப் பள்ளியில் அளிக்க முடியவில்லையே ஏன்?
 இதன்படி 60 சதவிகித மதிப்பெண் எடுக்கக்கூடிய பெரும்பான்மையான அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சுவையாக இருக்காது. அன்றைய காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், எதிர்காலத்தில், இந்தக் கல்வி முறை அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையிலே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
 இதே நிலை நீடித்தால் அரசுப் பள்ளி மாணவர்கள், பலவீனமாக்கப்படுவது மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டால் கூட ஆச்சரியமில்லை.
  

 மிக மிக அவசியமான கட்டுரை. மேலும் கட்டுரை ஆசிரியருக்கு நன்றிகள் பல... ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் தவறாமல் படிக்க வேண்டுகிறேன்... 
By குமார் ப 
6/7/2012 1:59:00 PM
 இன்று நாம் பள்ளியில் படிக்கும்போதே எதிர் காலத்தை பற்றி பெரிய பெரிய கனவுகள்,விழிப்புணர்வு போன்றவை வேண்டும் என்று எதிபார்க்கிறோம். அன்று படிப்பது நம் கடமை, உண்ணுவது, உறங்குவது போல் படிப்பு மனிதர்களுக்கு முக்கியம் என்ற மனப்பான்மையே பலருக்கும் இருந்தது. கல்லூரி போன பின் தான் வேலையை பற்றியும் வாழ்கையை பற்றியும் எண்ணமே வந்தது. அன்றைய ஆசிரியர்கள் வணங்க தக்கவர்கள்.படிப்பை உற்சாகமின்றி, மாணவர்களுக்கு பிடிக்கும் விதத்தில் சொல்லி கொடுக்காததும் குறை தான். கண்டிப்பு வேறு.தண்டிப்பு வேறு.நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் மனதில் வைத்து நேசிக்கிறார்கள்.மருத்துவம், ஆசிரியர் பணி, வழிபாடு தலங்களில், பணத்தின்,பதவியின் ஆதிக்கம் இருந்தால் அவற்றின் சிறப்பு குறைந்து விடும். 
By gopalan 
6/7/2012 8:06:00 AM
 கல்வியாளர்கள் அவசியம் படிக்க படிக்க வேண்டிய ஒருகட்டுரை! இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டது நடக்கும்! 
By சிறகு 
6/7/2012 7:27:00 AM
 அவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்.அவரின் பணிக்காலம் இரு கிராமப்பள்ளிகளில் கழிந்தது.படித்துக்கொண்டே இருப்பார்;பழகிக்கொண்டே இருப்பார்;தொண்டு நிறுவனங்களின் தொடர்பும் உண்டு;கூலி விவசாயிகளின் பிள்ளைகள் என்பதால் அவர்களின் பாடுகளை அறிந்திருந்தார்;கல்வியால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை உணர்த்தினார்;அழகாக உடுத்துவார்;காலம் தவறாமைக்கு முக்கியத்துவம் தந்தார்;கண்டித்தார்,கருணையுடன் உறவாடினார்;அண்மைக்கால மாற்றங்களை முற்றிலும் நிராகரித்தார்;அவர் நம்பும் தெய்வமும் வகுப்பறையில் இருப்பதாக எண்ணினார்;கதைகள்,தியானம்,யோகா,ஆசனம்,முத்திரைகள்,அனுதின நிகழ்வுகள்,சினிமா..அறிமுகம் செய்தார்;சாதி மதங்களுக்கு அப்பால் நின்று மனிதம் தேடினார்...ஆக,மனோபாவ மாற்றங்கள் ஆசிரியர்களிடம்..ஆசிரியர்களிடம்..ஆசிரியர்களிடம்....மட்டும் வேண்டும்,போதும்,அவசியம்..! 
By பி.ஸ்தனிஸ்லாஸ் 
6/7/2012 6:40:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக