சனி, 5 ஜனவரி, 2013

தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற-1



தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற-1

தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும் தங்கள் ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொள்ளவும், ஒரு புத்தகமாக கொண்டுவரும் நோக்கில் நான் எழுதிய கட்டுரைகளை இங்கே பதிப்பிக்கிறேன். இதை பலருக்கும் கொண்டு சேர்த்து பள்ளி/கல்லூரி மாணவர்கள் பயணடையச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்....



தமிழ் மீடியம் மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேசஎழுத முடியுமா?
  

நிச்சயமாக முடியும்! ஏற்கனவே லட்சக்கணக்கானோர் செய்துள்ளதை உங்களால் ஏன் செய்ய முடியாது? உற்சாகத்தோடு தொடர்ந்து முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இன்றிலிருந்து சரியாக ஆறுமாதம் கழித்து உங்கள் ஆங்கிலத்திறனை நீங்களே எடை போட்டுப் பார்த்தால் அசந்து போவீர்கள். இதை எழுதும் நான் ஓர் ஆங்கிலப் பேராசிரியனோ அல்லது ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்துபவனோ அல்ல! உங்களைப் போன்றே பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் முடித்து, கல்லூரியில் கால் வைத்ததும் ஆங்கிலத்தில் பேச முடியாததாலும் பாடங்களை கிரகிக்க முடியாததாலும் சிரமப்பட்டு பின்னர் முட்டி மோதி மேலே வந்தவன்.


ஏதோ சமாளிக்கும் அளவு மட்டுமல்ல; எந்த அளவுக்கு உழைக்கத் தயாராக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு; உதாரணமாக ஆங்கிலத்தில் சிறுகதை எழுதும் அளவுக்கு கூட நீங்கள் திறமை பெற முடியும். அதனால்தான் ‘ஆங்கிலம் பேச/பழக’ எனத் தலைப்பிடாமல், ‘புலமை பெறஎனத் தலைப்பிட்டேன்.  நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவுக்கு புலமை பெற, இருக்க வேண்டியதெல்லாம் இரண்டு விசயங்கள்தான். 1) ஆர்வம் 2)விடா முயற்சி. ஆம், எதை சாதிக்கவேண்டுமானாலும் இவ்விரண்டு தகுதிலும் வேண்டும் என்பது பொது விதிதான். எனினும் இவ்விரண்டும் ஆங்கிலத்தில் புலமை பெற எப்படி உதவும் என்பதை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.  முதலில் ஆங்கிலம் பேசுவதில் தமிழ் வழி மாணவர்களுக்கேயான மனத்தடையை நீக்கும் வண்ணம் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இருக்கும். பின்னர் படிப்படியாக நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய அத்தியாயங்கள் இருக்கும். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு செய்யும் உபதேசம் போல் இல்லாமல், தான் நேற்று சென்ற பாதையை இன்று உங்களுக்கு காட்டிக்கொடுக்கும் ஒரு நண்பனைப் போன்றதொரு தோழமையான தொனியில் சொல்ல முயற்சி செய்துள்ளேன்.

மேலும், பின்வரும் அத்தியாயங்களில் இரு உள்ளார்ந்த நோக்கங்கள் இருக்கும். ஒன்று, தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் பழகிக்கொள்வது எப்படி என்பது. மற்றொன்று கல்லூரியில் அல்லது பள்ளியில் ஆங்கில வழிக்கு மாறியதால் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி என்பது. இவ்விரண்டுக்கும் சிற்சில வித்தியாசங்கள் இருப்பினும் பல பயிற்சிகள் இரண்டுக்குமே உதவி செய்யும்.

முக்கியமாக இன்னொன்றை இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். இப்புத்தகத்தில் எங்குமே நாம் ஆங்கிலத்தை சொல்லிக்கொடுக்கப் போவதில்லை! ஆங்கில இலக்கணம் பற்றிப் பேசி உங்களை ரம்பம் போடப் போவதில்லை! முழுக்க முழுக்க நீங்களேதான் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். இப்புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டுமே.

ஒரு இனிப்புச்செய்தி! நீங்கள் தமிழ் வழியில் இவ்வளவு நாட்களாக படித்ததுதான் மற்றவர்களை விட நீங்கள் அதிக ஆங்கிலப்புலமை பெற உதவப்போகிறது. ஆம், மொழித்திறனுக்கென மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது. எந்த மொழியாயினும், மூளையின் அப்பகுதி எப்படி அமைந்துள்ளது, அப்பகுதியை நீங்கள் எப்படி பழக்கி வைத்துள்ளீர்கள் என்பதுதான் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் புதிய மொழியிலும் உங்கள் திறனை நிர்ணயிக்கப் போகிறது!  நீங்கள் தாய்மொழியில் படித்துவந்ததால் தமிழை நன்கு கற்றிருப்பீர்கள். மொழியை சரியாகவும் லாவகமாகவும் எப்படி பயன்படுத்துவது என்பது இயல்பாகவே உங்களுக்கு வந்திருக்கும். இலட்சக்கணக்கான சொற்களும் அவற்றின் பொருள்களும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனபதால் இணையான சொற்களை சொற்றொடர்களை அடையாளம் காணுதலும் பயன்படுத்துதலும் உங்களுக்கு எளிதாக கைவரப்பெறும். எளிதான சொற்றொடர்களை அமைத்து பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாமல் செம்மையான சொற்றொடர்களையும் உங்களால் அடையாளம் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் முடியும். உதாரணமாக, ‘ரமேஷ் அதிக மகிழ்ச்சி அடைந்தான்’ என்பதற்கு இணையாக ‘ரமேஷ் பேரின்பம் அடைந்தான்’ என்பதை உங்களால் புரிந்து கொள்ளவும் அல்லது நீங்களாக அச்சொற்றொடரை அமைக்கவும் முடியும். அத்திறன் ஆங்கிலத்தில் ‘very happy’என்பதற்கு பதிலாக ‘ecstasy’ என்ற சொல்லை பயன்படுத்த காரணியாக இருக்கும்.


இப்போது உங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்து இருக்கிறது அல்லவா? நீங்கள் இப்புத்தகத்தை படிக்கத் துவங்கியிருப்பதே உங்களின் ஆர்வத்தைக் காட்டும் நல்ல முதல் படி. வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக