சனி, 19 ஜனவரி, 2013

வாசிப்புத் திறனை மேம்படுத்த எழுத்தாளர்கள் மற்றும் ஃபேஸ்புக் உரையாடல்கள்!


வாசிப்புத் திறனை மேம்படுத்த எழுத்தாளர்கள் மற்றும் ஃபேஸ்புக் உரையாடல்கள்!


காட்சி ஊடகங்களின் பெரும் ஆதிக்கத்தில் வாசிப்பு என்பது வாசத்துக்கு கூட இல்லாமற் போய்விட்டது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஆனால் நம் காலத்தின் புத்தகப் பொற்காலம் இதுதான். வகை வகையாகத் தொகை தொகையாக நூல்கள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. பதிப்பகங்கள் பெருகியுள்ளன. ஏராளமானோர் எழுத வந்திருக்கின்றனர். பதிவு பெறாத உலகங்கள் நம் பார்வைக்காக வந்து நிற்கின்றன. நாம் என்ன செய்யப்போகிறோம்?

இப்படியான சூழலில் வாசிப்பை மேம்படுத்த ஆசிரியர், பெற்றோர், அரசாங்கம், பதிப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஊடகங்கள் என்ன செய்யவேண்டும்? என்னும் ஒரு கருத்துக்கணிப்பை புத்தகம் பேசுது இதழ் சார்பாக மேற்கொண்டோம். ஒவ்வொரு தரப்பிலிருந்தும் வந்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம். மேலும் புத்தகம் பேசுது ஃபேஸ்புக்கிலும் விவாதங்களை உருவாக்கினோம். அங்கிருந்து திரட்டிய தகவல்களையும் இணைத்துள்ளோம்.

இது தனிநபர் சார்ந்த பணியில்லை; ஒட்டுமொத்த சமுதாயத்தின் பணி!
- புத்தகம் பேசுது


எஸ். ராமகிருஷ்ணன்

முதலில் பெற்றோர் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். பெற்றோர் பாடம் எடுப்பது போல் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். வரலாறு, அறிவியல்... என அனைத்து நூல்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

ஐஸ் கிரீம் கடை, ஷாப்பிங்மால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதுபோல, குழந்தைகளை புத்தகக் கடைக்கு, நூலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உலகம் முழுவதும் பெட் டைம் ஸ்டோரி (Bed + Story) மிகவும் நேசிக்கப்படுகிறது. இந்த கதைகளை பெற்றோர் வாசித்துக் காட்ட வேண்டும்.

ஆசிரியர்கள் இதன் தொடர்ச்சியாக பாடப் புத்தகங்களுக்கு வெளியில் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நூல் அறிமுகம் செய்ய வேண்டும். இசை, விளையாட்டு, கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு தனி நேரம் ஒதுக்குவது போல் புத்தக வாசிப்பு, அறிமுகத்திற்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்.

மேலும், ஆர்வமுள்ள மாணவர் திறளை மேம்படுத்த அவர்களுக்குத் தீனி போடும் விதத்தில் பள்ளி நூலகம் இயங்க வேண்டும். அரசாங்கம் மாவட்டம் தோறும் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் அமைக்க வேண்டும்.

அனைத்து பூங்காக்களிலும் சிறுநூலகம் அமைக்க வேண்டும். மேலும் ‘புக்பார்க்’ தனியாகவும் அமைக்க வேண்டும். அரசாங்கம் சுற்றுலா பொருட்காட்சிபோல் குழந்தைகள் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும். இதில் அனைத்துப் பள்ளிகளையும் பங்கேற்க செய்ய வேண்டும்.
ஊடகங்கள் குழந்தைகள் படிக்க தனிப் பகுதியை உருவாக்க வேண்டும். இப்போது வெளிவரும் சிறுவர் வார இதழ்கள் மொழிநடையிலும், தரத்திலும் திருப்தியாக இல்லை. பெரியவர்களுக்குத் தருவதுபோல் எல்லா விவரங்களும் அடங்கிய குழந்தைகளில் மொழியிலும் அதற்கேற்ற வடிவமைப்பிலும் 4 பக்கங்களேனும் தனியாக தினமும் இணைப்பாக வெளியிடலாம். அமெரிக்காவில் வெளியிடுவது போல் பிரபலங்களின் குரலில் ஆடியோ புக் வெளியிட வேண்டும்.

வினாய் ஒப்ரா-நிகழ்ச்சி போல் தொலைக்காட்சிகளில் புத்தக அறிமுகத்திற்கும் நிகழ்ச்சிகள் உருவாக்க வேண்டும். மேலும் நீயா நானா? நிகழ்ச்சிபோல் புத்தகங்களுக்காக பிரத்யேகக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்காகத் தமிழில் நாளிதழ், வாரஇதழ்கள் வெளிவரவேண்டும்.

ஒவ்வொரு எழுத்தாளரும் குழந்தைகளுக்காக தனியான நடையில், எளிமையான எழுத்துக்களை உருவாக்க வேண்டும். அ, ஆ, இ, ஈ.... என எழுத்து அறிமுகம் செய்வதற்காகவும், ஆரம்ப வாசிப்புக்கான சிறுவர் பாடல்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

ஹாரிபாட்டர் நூல் உலகின் விற்பனை வரிசையில் நெம்பர் ஒன் ஆக உள்ளது. இது போன்ற விஷயத்தை சவாலாக எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கான Fictions உருவாக்க வேண்டும்.

எனது ‘ஏழுதலை நகரம்’ இது போன்ற ஒரு முயற்சிதான். மேலும் உலகின் புகழ் பெற்ற குழந்தை நூல்கள் தமிழில் தாராளமாக மொழிபெயர்க்க வேண்டும்.

பதிப்பாளர்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டு தமிழில் நமது கலாச்சாரத்தில் காமிக்ஸ் புத்தகங்கள் தயாரிக்க வேண்டும். பள்ளிகளுடன் இணைந்து மாணவர்கள் எழுதும் புத்தகங்களை வெளியிட வேண்டும். சோவியத் யூனியன் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ‘வானவில்’ புத்தகத்தைப் பிரித்தால் ஏழு வண்ணம் தெரியும் அது போல் வெளியிட வேண்டும். இன்று அச்சுத்துறையில் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். எனவே ஆப்பிள் பற்றி புத்தகம் போட்டால் ஆப்பிள் வடிவில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இச்சமூகம் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட பணத்திற்கு உள்ள மரியாதையை புத்தகத்திற்கும் தரவேண்டும். புத்தக வாசிப்பை மேம்படுத்துவதை இச் சமுதாயத்தின் முக்கிய கடமையாக உரைவேண்டும் இது சில தனிநபர்களின் வேலையில்லை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பணியாக இது இருக்க வேண்டும்.

பல துணிக்கடைகளில் ‘பைகள்’ ‘செடி’ என இலவசம் தருவது போல் புத்தகங்களையும் தரலாம். திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில் எங்கெல்லாம் அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் புத்தகம் தர முன்வரலாம்.

இந்தத் தேர்வு கலாச்சாரம் உடைக்கப்பட வேண்டும்.

ஈரோடு தமிழன்பன்

குழந்தைகளை உளவியல் திறனுடன் அணுகி அவர்களது மொழித்திறனை உள்வாங்கி ஆசிரியர்கள் அவர்களுடன் உரையாடலை நடத்த வேண்டும். முதலில் புத்தகமே இல்லாமல் உரையாடல், கதை சொல்லல், ஓவியம் எனத் தொடங்க வேண்டும். மெல்ல மெல்ல புத்தகவாசிப்பைத் துவங்கி பின்னர் ஆசிரியர் எழுத்தின் மூலம் உரையாட வேண்டும். அமெரிக்காவில் குழந்தைகளின் பெற்றோர் 'என் குழந்தை 50 புத்தகம் படித்துள்ளது' என சான்றிதழ் அளித்தால் அதை அங்கீகரித்து பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவிக்கிறது. மேலும் குழந்தைகள் படித்த நூல்களைப் பற்றி பள்ளியில் பத்து நிமிடம் உரையாட அழைக்கப்படுகிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு கட்டமாக உயர்த்தி, அதிகமாக வாசிப்பவர்களுக்கு ஆளுநர், அமெரிக்க ஜனாதிபதிவரை குழந்தைகளைப் பாராட்டி பரிசளிக்கின்றனர்.

‘அமெரிக்கா ரீட்ஸ்’ என்ற இயக்கத்தை கிளிண்டன் அதிபராக இருந்தபோது நடத்தினார்கள். இதில் அதிகமாக வாசிப்பவர்களைப் பாராட்டி பரிசு மழை பொழிந்தனர்.

இதுபோல் நாமும் நமது நாட்டில் வாசிப்போரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாநில முதல்வர் வரை அழைத்துப் பாராட்டி பரிசளிக்க வேண்டும்.

ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தகங்களை வாசித்து அது குறித்து வகுப்பறையில் விவாதிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்காக ‘Book Fund’ உருவாக்கி அந்த நிதியில் மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக அளிக்க வேண்டும். தலைசிறந்த மாணவர்களுக்கு ‘Good Conduct’ வழங்குவது போல் புத்தக வாசிப்பைப் பாராட்டி ‘புத்தகப் பிரியன்’ என்று விருது வழங்கப் பரிசீலிக்கலாம்.

நமது கல்வித்திட்டம் மதிப்பெண்களையே நோக்கி இருப்பதால் நமது குழந்தைகளின் பொதுவான புத்தக வாசிப்பு தியாகம் செய்யப்படுகிறது. இந்தத் தேர்வு கலாச்சாரம் உடைக்கப்பட வேண்டும். வெளி வாசிப்பை ஆசிரியர்கள் தருவதில்லை. எங்கள் காலத்தில் பாடம் குறித்த பல்வேறு புத்தகங்களை ஆசிரியர் முதல் நாளே படித்து வருவார். மாணவர்களையும் நாளை இந்தப் பாடம் எடுக்கப் போகிறேன் நீங்களும் படித்து வாருங்கள் என்பார் வகுப்பறையில் ஒரு திறந்த விவாதம் நடைபெறும். இப்போதைய நடைமுறையில் இது இல்லை.

வெளிப்படிப்பு பாடநூல் படிப்பை வளப்படுத்தும். பெற்றோர் இதனை வளர்க்க வேண்டும். பதிப்பாளர்கள் அதிகமாக வாசிப்பவர்களை புத்தகக் கண்காட்சி மேடைகளில் அழைத்து பாராட்டி பரிசளித்துப் பேச வைக்க வேண்டும்.
பாடத்திட்டத்துடன் சுய வாசிப்பிற்கான நூல்களை இணைக்க வேண்டும்.

மனுஷ்ய புத்திரன்

பெற்றோர்: பாடப் புத்தகங்களுக்கு வெளியே அவர்களின் உண்மையான கல்வி தொடங்குகிறது என்பதை நம்புங்கள். பாடப் புத்தகத்தை ஆழமாக வாசித்தறியவும் சுயமான படிப்புப் பழக்கம் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். என் தந்தை எனக்கு பால்யத்தில் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்தான் என் மொழித் திறனை உருவாக்கியது. அறிவைத் திணிப்பதற்கு முன்பு அவர்களது கனவுகளையும் கற்பனைகளையும் அனுமதியுங்கள். பொம்மைகள், புத்தாடைகள், உணவுப் பொருள்களைப் போல கற்பனை வளத்தைத் தூண்டும் புத்தகங்கள் அவர்களுக்கு அத்யாவசியத் தேவை. உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அடங்கிய ஒரு குட்டி நூலகத்தை உருவாக்குங்கள். மற்றதெல்லாம் செலவு, இது அவர்கள் எதிர்காலத்தின் மூலதனம்.

ஆசிரியர்: கதை சொல்லக்கூடிய ஒரு ஆசிரியரைக் குழந்தைகள் நேசிக்கிறார்கள். தங்களுடைய தோழனாகக் கருதுகிறார்கள். உங்கள் பாடத்திட்டத்தில் உள்ள கதைகளைத் தாண்டி அவர்களுக்கு கதைகளைக் கூறுங்கள். அந்தக் கதைகள் அடங்கிய புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்கள் பள்ளி நூலகத்தை (அப்படி ஒன்று இருந்தால்) பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவர்கள் சுயமாக வாசித்துவரும் புத்தகங்கள் பற்றி வகுப்பறைகளில் பகிர்ந்துகொள்ளும் சூழலை உருவாக்குங்கள். சுயமாக வாசிக்கும் மாணவர்களைச் சிறந்த மாணவர்கள் என்று அடையாளப்படுத்துங்கள்.

எழுத்தாளர்: குழந்தைகளைப் பற்றிய கதைகளை எழுதுவதும் குழந்தைகளுக்கு எழுதுவதும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளின் மன அமைப்பும் மொழி அமைப்பும் வளர்ந்தவர் களுடையதைவிட மாறுபட்டது. அதைப் பின்தொடர முயற்சி செய்யுங்கள். உங்களுடைய தர்க்கத்தை அவர்கள்மேல் திணிப்பதற்கு பதில் குழந்தைகளின் தர்க்க மனதைக் கண்டடைய முயற்சி செய்யுங்கள். அது கற்பனைகளும் மிகை புனைவுகளும் நிரம்பிய தர்க்க உலகம். நீதிக் கதைகளுக்குப் பதில் நீதியுணர்ச்சியைத் தூண்டும் புதிய கதைகளை எழுதுங்கள். எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து புதிய படக் கதைகளை உருவாக்குங்கள்.

பதிப்பாளர்: குழந்தைகளுக்கான புத்தகங்களை பதிப்பிப்பது ஒரு கனவை உருவாக்குவது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, நூலின் அளவு, மொழி எல்லாமே குழந்தைகளின் இதயத்தை தொடக்கூடிய ஒன்று. தமிழில் குழந்தைகளுக்கு அழகியல் உணர்ச்சியுள்ள நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுக்கான புத்தகங்களை ஒரு கலைப் பொருளை உருவாக்குவது போல உருவாக்குங்கள்.

அரசாங்கம்: பாடத்திட்டத்தோடு குழந்தைகளின் சுய வாசிப்பிற்கான நூல்களை இணையுங்கள். பள்ளி நூலகங்களை செம்மைப்படுத்துங்கள். சிறந்த குழந்தைகள் நூலைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களுக்கு மானிய விலையில் காகிதம் வழங்கலாம். மேலும் பொது நூலகங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் நூல்களை வாங்கலாம். ஒவ்வொரு பொது நூலகத்திலும் குழந்தைகள் பிரிவை சிறப்பாக அமைக்கலாம்.

ஊடகங்கள்: குழந்தைகளுக்கான இணைப்பிதழை வெளியிடும் பத்திரிகைகள் அவற்றை இன்னும் கற்பனை வளத்துடனும் அழகியலோடும் வடிவமைக்கலாம். பெரிய நிறுனவங்கள் சிறந்த குழந்தைகள் இதழைக் கொண்டு வரலாம். தமிழில் காமிக்ஸ்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. அதை வளர்த்தெடுப்பதற்கு ஊடக நிறுவனங்கள் முன்வரவேண்டும். பத்திரிகைகள் சிறந்த குழந்தைகள் புத்தகங்களை அறிமுகப்படுத்தி விரிவாக எழுத வேண்டும். தொலைக் காட்சிகள் குழந்தைகளை டான்ஸ் ஆடி, பாடவிட்டு ரசிப்பதில் ஒதுக்கும் நேரத்தில் சிறிதளவை புத்தக வாசிப்பு தொடர்பான போட்டி நிகழ்ச்சிகள், கதை சொல்லல் போன்றவற்றிற்கு ஒதுக்க வேண்டும்.
மாணவர்கள் பாடப் புத்தகங்களைக் கடந்து வர வேண்டும்.

ரவிக்குமார்

அயல்நாடுகளில் ஏப்ரல் 23 சர்வதேச புத்தகதினமன்று குழந்தைகள் ஒரு பெரிய புத்தகச் சந்தையை ஏற்படுத்தி எந்தப் புத்தகத்தை வேண்டு மானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்னும் நிலை உள்ளது. அதற்கான தொகையை ஆண்டின் முற்பகுதியில் கல்விக்கட்டணத்துடன் பெற்றுக்கொள்கின்றனர். நமது நாட்டிலும் நூலகக்கட்டணம் என்று தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் பள்ளி நூலகங்கள் திறம்பட செயல்படுவதில்லை. அதற்குரிய அமைப்பு கல்விக்குள் இல்லை. காரணம் நம்முடைய பாடப்பொருள் முழுவதுமே பாடப்புத்தகங்களில் எழுதி விடுகிறார்கள்.

சிதம்பரத்திற்கு அருகே ராமகிருஷ்ணா என்னும் சிறிய பள்ளிக்கூடத்தில் நான் படித்தபொழுது பாடப்பொருள் தலைப்புகள் பாடப்புத்தகத்தில் இல்லாததற்காகவே நாங்கள் நூலகங்களுக்குச் சென்றோம். அங்குதான் மாப்பசானிலிருந்து பல்வேறு தரமான அயல்மொழி இலக்கியங்களை நான் வாசித்தேன். இன்னொரு விசயம் என்னுடைய ஆசிரியர்கள் வாரம் ஒருமுறையேனும் ஏதேனும் ஒரு பொதுத் தலைப்பைக் கொடுத்து நாங்கள் வகுப்பிலோ, கூட்டத்திலோ பேசவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். வீட்டில் அப்போதெல்லாம் பேச்சைத் தயாரித்துக் கொடுக்கமாட்டார்கள். நாங்களாகத்தான் நூலகம் சென்று புத்தகம் வாசித்து பேச்சைத் தயாரித்துக் கொள்வோம்.

எனக்கு சிதம்பரத்தில் புவியியல் ஆசிரியர் ஒருவர் இருந்தார். சடகோபன் என்று பெயர். வக்கீலுக்குப் படித்தவர். அவருடைய குரல் கிரீச் என்று இருக்குமென்பதால் வழக்குமன்றத்துக்கு வாதாடச் செல்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு வந்துவிட்டார். அவர் வகுப்புக்கு வரும்போதே “பாடப்புத்தகத்தை எடுத்து வராதே, பொதுவாக படித்துப் பழகு, பாடப்புத்தகத்தில் நிறையத் தவறு இருக்கும்” என்று பலபுத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக் கிறார். எங்கள் பெற்றோர்களும் இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்கக்கூடாது என்று எங்கள் வாசிப்பில் தலையிட்டதில்லை. எங்களைச் சுதந்திரமாக வாசிக்க அனுமதித்தார்கள்.

முதலில் நம்முடைய பாடப்பொருள் (Syllabus) வெளிப்புத்தகங்களையும் வாசிக்கின்ற ஸ்பேசுடன் (Space) இருக்க வேண்டும். இரண்டாவது பொதுப்புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தையும் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இந்த இரண்டிலுமே இங்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பொறுப்பு நம் அனைவருடையதும் ஆகும்.
மாணவர்கள் விரும்பும் விடயங்களை இணைத்தல் வேண்டும்.

ஜி. குமரேசன், விருபா.காம்

Kinder Joy போன்ற சிறார்களுக்கான மிட்டாய்களும், Bournvita, Horlicks போன்ற ஊட்டச்சத்துணவுகளும் எவ்வாறு சிறார்களைக் கவரும்வண்ணம் தங்கள் விளம்பரங்களை உருவாக்கித் தங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றன என்பதை இங்கு பொருத்திப் பார்த்தல் வேண்டும். ஒன்று வாங்கினால் இன்னொன்று கட்டாயமாக கிடைக்குமென்றால் அப்பொருளின் விற்பனை எகிறும், மக்களைச் சென்றடையும். தமிழில் பெயர்வைத்தால் மட்டுமே திரைப்படங்களுக்கு வரிச்சலுகை என்ற அறிவிப்பும் இத்தகையதே. உடனடிப் பலன் என்பது கூடவே இருந்தால் அதிக நன்மை கிடைக்கும்.

இந்தவகையில் வாசிப்புத் திறனைக் கூட்டுவதற்கு கூடவே சலுகையாக மாணவர்கள் விரும்பும் விடயங்களை இணைத்தல் வேண்டும். பாடத்திட்டப் புள்ளிகளுடன் வாசித்தலுக்கும் தனியாகப் புள்ளிகள் கிடைக்குமென்றால், அந்த வாசிப்பின் மூலம் ஒரு போட்டியில் கலந்துகொண்டு மாணவர்களைக் கவரும் பரிசுகளைப் பெறமுடியுமென்றால் மாணவர்கள் வாசிப்புத்திறனை தாங்களாகவே உயர்த்துவார்கள். ஆண்டுதோறும் மாவட்டரீதியில் சிறந்த வாசிப்புத்திறனைக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றால் நிச்சயமாக மாணவர்கள் விருப்புடன் வாசித்தலில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் பண்டிகைக்கால விடுமுறையில் மாணவர்களுக்கு பரிசுகள் (தீபாவளி என்றால் வெடி) கிடைக்கும் என்றால்கூட அதனை மாணவர்கள் விரும்புவார்கள்.

மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்கள் நிலையில், அவர்கள் விரும்புக்கூடிய விடயங்கள் சலுகையாகத் தரப்படல் வேண்டும். ஆசிரியர்களுக்கு அவர்கள் ஊதியத்தில் ஒரு சிறு உயர்வும், பெற்றோர்களுக்கு மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் சிறு சலுகையும் தரலாம். மேலே கூறிய அயல்நாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்கு தலைமைதாங்க ஆசிரியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றால் அதனை அடையப் பல ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் வாசிப்புத்திறனில் அக்கறை காட்டுவார்கள்.

அடுத்து எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனைக் கூட்டும் புத்தகங்களை வெளியிடவும், பதிப்பகங்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் வாசிப்பு முகாம்களை ஆசிரியர்கள் நடத்தும்போது உதவுதல் அவசியமானதாக்கலாம். அவ்வாறு கலந்துகொள்ளும் பதிப்பகங்களின் புத்தகங்கள் உடனடியாக நூலகங்களுக்கு கொள்வன செய்யப்படும் என்றும் அறிவிக்கலாம்.

திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன்னதாக செய்திச் சுருள் திரையிடப்படும் முறை போல், தொலைக்காட்சி ஊடகங்களில் மாணவர்களின் வாசிப்புத் திறன் தொடர்பில் தினமும் ஒரு மணிநேரமாவது நிகழ்ச்சிகள் இருப்பதற்கு அரசு கட்டாயப்படுத்தலாம், அவ்வாறே அச்சு ஊடகங்களில் மாணவர்களின் வாசிப்புத்திறன் தொடர்பிலான பதிவுகளை, ஆக்கங்களைக் கட்டாயப்படுத்தலாம். சிகரெட், மதுபான விளம்பரங்களுக்கு மேலதிகமாக அரசு வரி விதிப்பதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறன் தொடர்பிலான நிகழ்வுகள், பரிசுகளுக்கான செலவினங்களைச் செய்யலாம். அத்துடன் வாசிப்புத்திறன் தொடர்பிலான அத்தனை நிகழ்வுகள், பரிசுகள், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களையும், படங்களையும் இணையம் வழி வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் நிலையில் வெளியிடவேண்டும்.

குழந்தை இலக்கியம் என்று பெயர் சூட்டினால் மட்டும் குழந்தை இலக்கியம் ஆகிவிடாது.

என். மணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

ஆசிரியர்களுக்கு வாசிப்புப் பழக்கம் மேம்பட்டிருந்தால் அன்றி குழந்தைகளை வாசிக்கத் தூண்ட முடியாது. பள்ளி முதல் பல்லைக் கழகம் வரை பாடநூல்களுக்கு அப்பால் ஒரு வாசகப் பரப்பு உள்ளது என்பதை பாடத்திட்டத்தின் ஊடாகத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. வாசிப்பு பழக்கமுள்ள ஆசிரியர்கள் 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். எனவே குழந்தைகளின் வாசிப்பு மேம்பட வேண்டுமெனில் ஆசிரியர்கள் வாசிப்பு மேம்பட வேண்டும்.

ஊடகங்களின் காட்சி விவரணங்கள் குழந்தைகள் மனதில் கேள்வியை உருவாக்குவதாக இல்லை. ஏற்கனவே குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த விடைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதனால் தனது எண்ணம் சரிதான் என்ற முடிவுக்கு வரச்செய்கிறது. ஒரு தேடலை, கேள்வியை குழந்தைகளின் மனதில் உருவாக்கத் தவறி இருக்கிறது. குழந்தையின் உணர்வுக்கும் காட்சி படிமத்திற்கும் நிரம்ப இடைவெளி இருக்கிறது. அதிகமாக சிரிக்கும் குழந்தையே அதிகமாக சிந்திக்கும் என்கிறார்கள். நமது ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வுகளால் சிரிப்புக்குப் பின் சிந்தனை இடம் இருக்கிறதா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. வாசிப்பை ஒட்டியே கூட காட்சி ஊடகங்கள் நிரம்ப நிகழ்ச்சிகளைத் தயார் செய்யலாம்.

குழந்தைகள் விரும்பிப் படிக்கும் கடித இலக்கியங்கள், பயண இலக்கியம் போன்றவை கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வளர்ந்து உள்ள அளவுக்குக் கூட தமிழகத்தில் வளர்ச்சி அடையவில்லை. குழந்தை இலக்கியம் என்று பெயர் சூட்டினால் மட்டுமே அது குழந்தை இலக்கியம் ஆகிவிடாது. பல படைப்புகள் அப்படித்தான் குழந்தை இலக்கியமாக படைக்கப்படாமலே குழந்தை இலக்கியம் என திணிக்கப்படுகிறது. பதிப்பகங்களுக்குத் தொழில் முறை நோக்கம் மாற வேண்டும். அது ஒரு சேவை, தொண்டு என்ற மனநிலை பதிப்பாளர்களுக்கு ஏற்பட வேண்டும். பதிப்பகங்கள் குழந்தை இலக்கியத்தை எடுத்துச் செல்ல அச்சு ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்ற வேண்டும். வாரம் ஒரு முறை நூல் மதிப்புரை நூல் அறிமுகம் என்பது மாற்றப்பட்டு தினமும் புத்தகங்ள் வாசிப்பு பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும்.

அரசியல் பார்வை, கல்விக் கொள்கை பாடத்திட்டம், கலைத் திட்டம் எல்லாவற்றிலும் வாசிப்பு மேம்பட ஒரு மீள் பார்வை தேவைப்படுகிறது. கல்விக் கொள்கை என்று இருப்பது போல் நூலகக் கொள்கை, வாசிப்பு மேம்பாட்டுக் கொள்கை என்று ஒன்றைக் கூட அரசு அறிமுகம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக