விபரம் எதுவும் அறியாமல், அய்யாவின் உத்தரவின் படி நேரில் சென்றேன்.
இரண்டு மணி நேரம் அவர் சொன்ன அந்த இடத்தில் இருந்து விட்டு, அங்கிருந்து கிளம்பும் போது சீனிவாசன் அய்யாவிற்கு கூப்பிட்டு பெரிய தைரியத்தையும், என் தமிழையும் துணைகொண்டு சொன்னேன்.
ஆம், எம் செல்லங்கள் தமிழ்மொழியில் மட்டுமே பாடங்களை பயின்று வருகிறார்கள். ஆசிரியர்களை கூட அக்கா என்றே அழைக்க பயிற்றுவித்து, தமிழகத்தின் தென் மாவட்டத்தின் பனியன் நகரமாம் திருப்பூரின் ஓரத்தில் கடந்த 18 வருடங்களாக அமைதியாகச் செயல்பட்டு வருகின்றது அந்த அற்புதமான பள்ளி. அது,
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி :
310 மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை பாடப்பிரிவுகள் என நிதானமாகவும் மிக நேர்த்தியாகவும் செயல்பட்டு வருகிறது தாய்த்தமிழ் பள்ளி.
எம்முடன் வந்த புகைப்படக்காரர் கைகட்டி நின்றதை பார்த்த ஒரு செல்லம், அருகில் வந்து அவர் கையை தட்டிவிட்டு சொன்னது " அடிமை போல நிற்க்காதீங்க அண்ணா"என்று.
பள்ளியின் உள்ளே நுழையும் பொழுதே எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு,

வாசல் கதவை ஒரு பெரியவர் திறந்து உள்ளே செல்ல அனுமதியளித்தார். உள்ளே செல்லும் போதே வலது புற்றத்தில் ஒரு அம்மா, ஓரத்தில் குழந்தைகளின் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். பின் அவராகவே அருகில் வந்து, "சொல்லுங்கள் என்ன விசயம்? என்றார்.
நம் நோக்கத்தை சொல்லி, பொருப்பில் உள்ளவர்களை பார்த்து பேச வேண்டும் என்றோம்.
சிரித்தபடியே எங்களுக்கு அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டுவிட்டு தொடந்தார் அந்த அம்மா. அவர் தான் பள்ளி அறக்கட்டளையின் அறங்காவலரான த.விசயலக்குமிஅம்மா.

தொடர்ந்து பள்ளியின் தலைமை தாளாளர் கு.ந.தங்கராசு அவர்களை சந்தித்து பேசினோம். மிக மிக அற்புதமான மனிதராக அவர் தெரிந்தார். குழந்தைகள் மேல் அவர் மிகுந்த அன்பும் அவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றலும் இவரிடம் இருந்து தான் விதைக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஒவ்வொரு குழந்தையும் முத்துக்கள் தான்.
அங்குள்ள எந்த ஒரு குழந்தையை வேண்டுமானலும் உடனே தூக்கி ஒரு மேடையில் நிறுத்தினாலும் அவன் ஏதாவது ஒரு திறமையை வெளிப்படுத்தி விடுவான். அவ்வளவு ஆற்றல்!! அந்தக் குழந்தைகளிடம்.
மக்களின் நிதியால் மட்டுமே இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லாமல் இதன் இயக்குனர் கு.ந.தங்கராசு அய்யா அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி ஆசிரியர்களுக்கு சம்பளத்தொகை கொடுத்து வருகிறார்.
இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் இந்த பள்ளியை நடத்தக் காரணம் என்ன என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் தான் இன்னும் எம்மை அங்கிருந்து அழைத்து வர விடாமல் தங்க வைத்து விட்டது. ஆம்,
இதுவா சிரமம்? ஹா.. ஹா.. ஹா..
எங்கள் குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விருட்சங்கள். ஒருமுறை எமது பள்ளியில் படித்த மாணவன் ஒருவனின் தந்தையான உள்ளூர் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளி ஒருவர், உங்கள் பள்ளியில் படித்த மாணவன் என்பதால் தான் அவன் படிக்கும் கல்லூரில் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் என் மகனை "தமிழ் வழியில் படித்த மாணவன் இவன்" என்று பெருமைபடுத்தினார்கள் என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நமது பள்ளியில் படித்து வெளியில் சென்ற மாணவர்கள் அனைவருமே மேல்நிலை படிப்புகளில் சிறந்த மாணவர்களாக விளங்குகின்றனர். அனைத்து பள்ளிகளும் "தாய்த்தமிழ் பள்ளி மாணவன்" என்றாலே ஒரு மரியாதையுடன் பார்க்கின்றன.
இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க போகிறது சொல்லுங்கள்? என்றார்.
உண்மை தானே சொந்தங்களே?
இப்படி சத்தமே இல்லாமல் எத்தனையோ பள்ளிகள் இருக்கின்றன. இந்த ஒரு பள்ளியை வெளிச்சப்படுத்துவதனால் இது போன்ற மற்ற பள்ளிகளையும் உலகம் தேடிப் பிடிக்கும் என்ற எமது நிறுவனர் சீனிவாசன் அய்யா அவர்களின் சொல்லை செயலாக்க இதோ விரைந்திடுகிறோம்.
எம்முடன் உங்கள் கரங்களும் வலுவேற்க வரவேற்கிறோம்..
வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!!
கிட்டத்தட்ட ஆறு இலட்சம் ரூபாய் கடனும், அதில் வட்டியுடனான கடன் மூன்று இலட்சமும் உள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் இந்தப் பள்ளியை இவர்கள் நடத்தி வருகின்றனர். வலையுலக நண்பர்கள் இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு உதவ முன்வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- தொழிற்களம் அருணேஸ்
தொடர்புக்கு :
தாய்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
1/607 அ, வள்ளளார் நகர் கிழக்கு
திருப்பூர் - 641604.
கு.ந.தங்கராசு
+91 98439 44044
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக