சனி, 5 ஜனவரி, 2013

தமிழ் மீடியம் மாணவர்கள் ஆங்கிலப் புலமைபெற - 2

2. ஆங்கிலத்திறன் புத்திகூர்மையின் வெளிப்பாடா?

முந்தைய அத்தியாயம்:


நம் சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று ஆங்கிலம் நன்றாக பேசத்தெரிந்தவன் புத்திசாலி! இது சினிமா, பத்திரிக்கை போன்ற ஊடகங்களாலும் மக்கள் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து, ஆங்கிலம் அதிகாரத்தின் மொழியாக இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு சேவகம் புரிந்த அரசு அதிகாரிகளும் ஆங்கிலப் புலமை பெற்றிருந்ததால் அவர்களுக்கு பணிந்து நடந்த பொதுமக்களுக்கு,ஆங்கிலம் அச்சத்தையும் மலைப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இவ்வாறான தொன்றுதொட்டுவரும் நம்பிக்கையால் ‘நன்றாகப் படித்தவன்’ என்றாலே நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்தவன்தான் என்றொரு எழுதாவிதி வந்துவிட்டிருக்கிறது. அதுவே எவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் பாடங்களை பொருளுணர்ந்து படித்திருந்தும் தமிழ் வழி மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பதாகவும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. சரி வரலாற்றை விட்டுவிடலாம், உங்களுக்கு சில எளிய கேள்விகள்:

அ) ஆங்கிலமல்லாத பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, சீன மொழி போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றவர்கள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன? அந்த மொழிகள் உங்களுக்கு தெரியாததால் எப்போதேனும் தாழ்வாக உணர்ந்திருக்கிறீர்களா?
ஆ) வடக்கத்தி சேட்டுக்கள் மார்வாடிகளிடம் வேலை செய்யும் ஐந்தாம் வகுப்பைத் தாண்டிடாத வேலையாட்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஹிந்தி, உருது, மார்வாரி போன்ற மொழிகளில் பேசும் திறன் பெற்றிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
இ) சுற்றுலாத் தலங்களில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் பேசுவதை கவனித்திருப்பீர்கள். சென்னை, பாண்டிச்சேரி, மதுரை போன்ற நகரங்களில் அவர்களில் சிலர் வேறுசில ஐரோப்பிய மொழிகளைப் பேசுவதையும் பார்த்திருக்கலாம். அவர்களைப்போல நம்மால் பேச முடியவில்லையே என ஏங்கியிருக்கிறீர்களா?
ஈ) ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளில் எந்த மொழியில் கல்வி கற்கிறார்கள்? அவர்கள் நிகழ்த்தியுள்ள கண்டுபிடிப்புகள் சாதனைகள் எத்தகையவை? அவர்களால் உலகளாவிய வாணிபம் செய்ய முடிகிறதா? இல்லையா?
உ) தொலைக்காட்சியில் ஒரே ஒரு அலைவரிசை மட்டுமே இருந்த காலத்தில் தூர்தர்ஷனில் சினிமாவும் நாடகங்களும் பார்த்தே ஹிந்தியை சரளமாக பேசக்கற்றவர்களை உங்களுக்குத் தெரியாதா?

 முதல் கேள்விக்கு நம்மில் பலரது பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். ஏனெனில் பிரெஞ்சு, சீன மொழி போன்றவற்றை தெரிந்துவைத்திருப்பது பெரிய விசயம் என யாரும் நமக்கு சொல்லித்தரவில்லை. ஜெர்மானிய மொழியில் சரளமாக பேசுபவன் பெரிய அறிவாளி என யாரும் சொன்னதில்லை. ஏனெனில் அவையாவும் நம்முடைய அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவை அல்ல. அவற்றில் எதுவும் நம்முடைய வேலை வாய்ப்பை முடிவு செய்வதோ நமது பொருளீட்டும் திறனை பாதிப்பதோ இல்லை. அதனால் நாமும் கண்டுகொள்வதில்லை. உண்மையில் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்அரபி மற்றும் சீனம் ஆகிய மொழிகள்தாம் உலக அளவில் செம்மொழிகள், ஆழ்ந்த இலக்கியங்களையும் மனித வாழ்கைக்கு தேவையான சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கொடையாக வழங்கியவை. (விக்கி மூலம்:http://en.wikipedia.org/wiki/Classical_language).  நம்முடைய தமிழ் மொழியும் அத்தகைய செம்மொழிகளுள் ஒன்றே என இன்று விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. எனவே ஆங்கிலம் ஏதோ உயர்ந்த, மேன்மையான, கடினமான மொழி என்ற எண்ணம் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

 நான் பிறந்து வளர்ந்த ஈரோடு நகரில் ‘பீஸ் மடித்தல்’ என்றொரு வேலை உண்டு. வேட்டி, லுங்கி போன்றவை சில நூறு மீட்டர்கள் நீளத்துக்கு ஒரே துணியாக நெய்யப்பட்டு வெளிவரும். அவற்றை தேவையான அளவு கஞ்சி அல்லது வண்ணத்தில் ஊறவைத்து காய வைப்பார்கள். அப்படி காய்ந்த துணிகளை தேவையான நீளத்திற்கு வெட்டி மடித்து வைப்பதே அந்த வேலை. வாரக்கூலிகளாக இவ்வாறு சேட்டுகளிடம் பணிபுரிபவர்கள் ஹிந்தி கூட அல்ல... அதிலும் வேறுபட்ட மார்வாரி மொழி பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். ஒரு மொழியை பழக்கத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளில் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்கின்றனர். பள்ளிக் கல்வி மட்டுமின்றி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பைக்கூட தங்கள் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அதனாலேயே அவர்கள் ஆழ்ந்து கற்று அறிவுத்திறன் பெற்றவர்களாகவும் புதிய பொறிகளை கண்டுபிடிக்கும் சாதனையாளர்களாகவும் விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஜெர்மானியர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அங்கிருந்து தோன்றிய அறிவியல் அறிஞர்கள் பற்றியும் நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை. அதே போல இரண்டாம் உலகப்போருக்கு பின் வீழ்ந்து அதிலிருந்து எழுச்சி கொண்டு இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பான். தரத்திற்கு பெயர் போன பொருட்கள் அங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகிலேயே அதிக கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டோ நிறுவனம் ஜப்பானில்தான் இருக்கிறது. அவர்கள் அனைவரும் தாய்மொழியில்தான் கல்வி கற்கின்றனர். ஆங்கிலத்தை வெறும் தகவல் தொடர்பு மொழியாகவே கையாள்கின்றனர். சரி, விடுங்கள்... நம் நாட்டிலேயே ஒரு பொதுமொழி இல்லாததால் நாம் உயர்கல்வியை ஆங்கிலத்திலேயே கற்போம். ஆனால், இதுவரை நீங்கள் தமிழில் பயின்றதால் பாதகம் ஏதும் இல்லை சாதகம்தான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

இங்கே நான் நிறுவ விரும்புவது மூன்று விசயங்கள். ஆங்கிலம் பேசுபர்களெல்லாம் புத்திசாலிகள் என்றோ பேசத்தெரியாதவர்கள் முட்டாள்கள் என்றோ அர்த்தம் அல்ல. உலகிலுள்ள எத்தனையோ மொழிகளைப்போல ஆங்கிலமும் ஒரு மொழி, அவ்வளவே. தொடர் பழக்கத்தினால் சூழ்நிலையால் எந்த ஒரு மொழியையும் இயல்பாக எளிதாகக் கற்கலாம்!
எங்கே அதை என்னோடு செர்ந்து நீங்களும் சொல்லுங்கள்...

“ஆங்கிலப்புலமை புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல.ஆங்கிலகிபுலமை புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல. 
ஆங்கிலம் மற்றுமொரு மொழியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக