சனி, 19 ஜனவரி, 2013

வாசிப்பு என்னும் சுவாசிப்பு

வாசிப்பு என்னும் சுவாசிப்பு
அந்தக்காலத்தில் குழந்தை அழுதால் தாலாட்டு பாடி குழந்தையின் அழுகையை நிறுத்துவார்கள்.இப்பொழுதோ ரிமோட்டை கையில் கொடுத்து விட்டால் குழந்தையின் அழுகை ஸ்விட்ச் போட்டாற் போல் நின்று விடுகின்றது. வாசிப்புதன்மை சமூகத்தில் அருகி வருவதற்கு இதுதான் ஆரம்பகாரணம்.

நான்கு மாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நாம் டிவி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் டிவி திரையை பார்க்க ஆரம்பிக்கின்றது.குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.

வாசிப்பு திறன் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சில் தெளிவும்,ஞாபகசக்தியும்,கருத்தாழமும்,சொல்வதை கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும் ,பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.பிற்காலத்தில் அறிவு செறிந்த மாணாக்கனாக தெளிவான கருத்துடையவனாக அவனது வாழ்கை மேம்பட துணை நிற்கும்.

வாசிப்புத்திறமை பெற்ற மாணவனுடைய செயல்களும்,சிந்தனையும் ஞாபகசக்தியும் வாசிப்புத்திறன் இல்லாத மாணவனில் இருந்து வித்தியாசப்படும்.வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமின்றி,சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.

வாசிப்பின் மூலமே மனிதன் சிறப்படைகின்றான்.இந்த வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கைகளில்தான் உள்ளது.நான்கு மாதக் குழந்தை டிவி திரையை நோக்க ஆரம்பித்தால் அதனை அணைத்து விட்டு கலர் கலர் படங்கள்,பூக்கள் போட்ட புத்தகத்தை விரித்து காட்டுங்கள்.குழந்தை வளர வளர புத்தகங்களின் பக்கங்களை புரட்ட கற்றுக்கொடுங்கள்.குழந்தை பேச ஆரம்பிக்கும் பொழுது புத்தகத்தைகாட்டி கற்றுக்கொடுத்தலை ஆரம்பியுங்கள்.வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும்.

குழந்தைக்கு பிறந்த நாளா?வீட்டில் விஷேஷமா?பொம்மை,வீடியோ கேம்,விளையாட்டு சாதனங்கள் என்று வாங்கி பரிசளிப்பதில் காட்டும் ஆர்வம் புத்தகம் வாங்கி பரிசளிப்பதில் இல்லை என்பது கவலை தரும் உண்மை.

ஒரு வீட்டை பற்பல கற்பனைகோட்டைகள் அடுக்கடுக்கடுக்காய் மின்ன பார்த்து பார்த்து கட்டுகின்றோம்.துணிவகைகள் வைக்க அலமாரி,நகைகள் வைக்க,மளிகை வைக்க,பொம்மைகள் வைக்க,பாத்திரங்கள் வைக்க,டப்பாக்கள் அடுக்க என்று ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து செய்கின்றோம்.எத்தனை வீட்டில் புத்தகங்களை பாதுகாத்து வைக்க என்று புக் செல்ஃப் அமைக்கின்றோம்?இதுவும் கவலை தரக்கூடிய உண்மையே.

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகள்,பஸ்ஸில்ஸ்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களில் இளைய தலைமுறைகள் மிக மிக குறைவு என்பது கவலைக்குறிய விடயம்.குறுக்கெழுத்துப்போட்டியை பதினைந்து நிமிடங்களில் முழுமையாக நிரப்பி விடும் திறன் பள்ளிப்படிப்பை தாண்டாத தாய்க்கு அமையப்பெற்று இருந்தால், பல்கலைகழகம் படிக்கும் அவளது மகனுக்கு 4 கட்டங்களைக்கூட நிரப்ப இயலாத அளவிற்கு அவர்களது திறமை வேறு பக்கம் சிதறி இருக்கின்றது.

ஒரு புத்தகத்தை முழுதாக படிக்கும் நேரத்தில் கம்பியூட்டரில் டவுன் லோட் செய்து முழுதாக ஒரு படத்தினை பார்த்துவிடுவது இக்காலத்தின் கோலம்.இணையத்தில் தேவையற்ற தளங்களோ,சமூக தளங்களோ ஆற்றலை முழுமையாக தந்து விட இயலாது.ஒரு மாணவனை பரிபூரணமானவானாக,சிறப்பான மாணவனாக,அறிவான மாணவனாக இணையதளங்கள் உருவாகுவதை விட அம்மாணவனின் வாசிப்புதன்மை அவனது சிறப்பை வளப்படுத்துகின்றது.

குடும்பத்தில் விஷேஷமா?உடனே ரெஸ்டாரெண்டுக்கு குடும்பத்துடன் சென்று கற்றையாக பணத்தை கொடுத்து உண்டு மகிழ்கின்றோம்.ஒரு முறை சற்றே வித்தியாசமாக ஒரு புத்தகக்கடைக்கு அழைத்துச்செல்லுங்களேன்.வயிறு நிரம்புவதை விட மூளை நிரம்புவது நன்றல்லவா?

ஸ்விம்மிங்க் கிளப்பில் மெம்பராக,டென்னின்ஸ் கிளப்பில் மெம்பராக.கிரிகெட் கிளப்பில் மெம்பராக குழந்தைகளை சேர்த்து விடும் ஆர்வம் ஏன் நூலகத்தில் சேர்த்து விடுவதில் இல்லை?சிந்தியுங்கள்.சிறப்படைவீர்கள்.

குழந்தைகள் இன்னாள் விதைகள்.பின்னாள் விருட்சங்கள்.எதிர்காலத்தில் விருட்சங்கள் மரச்சட்டங்களாகவும்,அடுப்பெறிக்க உதவும் விறகுக்கட்டைகளாகவும் ஆகாமல் நல் விருட்சங்களாக,நிழல் தந்து உதவும் விருட்சங்களாக,காற்றினை சுத்தப்படுத்தும் ஊக்கிகளாகவும் சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய விருட்சங்களாகவும் ஆற்றல் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து வாசிப்புத்திறனை நலவே வளர்த்து வாழ்க்கையெனும் இனிய பயணத்தை சீருடன்,சிறப்புடன்,பயனுள்ள வகையில் கழிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக